உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை விமான நிலையத்தில் அதிகரிக்கும் சரக்கு போக்குவரத்து

கோவை விமான நிலையத்தில் அதிகரிக்கும் சரக்கு போக்குவரத்து

கோவை; கோவை சர்வதேச விமான நிலையம் ஏப்., முதல், அக்., வரையிலான காலத்தில், 8,676 டன் சரக்குகளை கையாண்டுள்ளது.கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் சேவையுடன் சரக்கு போக்குவரத்துக்கான ஒருங்கிணைந்த சரக்ககம் விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஜவுளி, எந்திரங்கள், உதிரிபாகங்கள், ஆடைகள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல வெளி நாடுகளுக்கு 'பாண்டட் டிரக்' சேவை மூலம் சரக்குகள் அனுப்பப்படுகின்றன. கோவை விமான நிலையத்தில் நடப்பாண்டு சரக்கு போக்குவரத்து அபரிமிதமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது: கடந்த, 2023 - 24 நிதியாண்டில், சர்வதேச அளவில், 1,704 டன் சரக்கு கையாளப்பட்டது. இது, 2022 - 23 ம் ஆண்டை ஒப்பிடும் போது, 9.10 சதவீதம் அதிகம். உள்நாட்டை பொறுத்தவரை, இதேகால கட்டத்தில், 9,335 டன் சரக்கு கையாளப்பட்டது. இது, 2022 - 23 ம் நிதியாண்டை ஒப்பிடும் போது, 12.10 சதவீதம் அதிகம். இதன் வாயிலாக மொத்தம், ரூ.5.21 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடந்துள்ளது.நடப்பாண்டு, ஏப்., முதல், அக்., வரையிலான காலத்தில் சர்வதேச அளவில், 1,427 டன், உள்நாட்டில், 7,249 டன் சரக்கு கையாளப்பட்டது. இதன் வாயிலாக, 4.65 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ரூ.8.32 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடக்க வாய்ப்புள்ளது. விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டால், விமான நிலைய ஓடுபாதை நீளம் அதிகமாகும். உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும். இதனால், சரக்கு போக்குவரத்து கணிசமாக அதிகரிக்கும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ