பொள்ளாச்சி: பண்டிகை, விசேஷ நாட்களில் பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால், நகர மக்கள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரோடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. இப்பணிக்காக நிலங்கள் கையகப்படுத்த தனியார் நிலங்களுக்கு, 33.57 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. ரோடு விரிவாக்கப்பணிகள், 34.61 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றன. அதில், ரோடு சந்திப்பு பகுதியான மரப்பேட்டை, தேர்நிலையம், தலைமை தபால் அலுவலகம், காந்தி சிலை, பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. எதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதோ அதன் நோக்கமே வீணாகும் சூழல் உள்ளது. ரவுண்டானா பகுதியில், நான்கு பக்கத்தில் இருந்தும் வரும் வாகனங்கள், ஒரே நேரத்தில் திரும்ப முற்படும் போது, நெரிசல் ஏற்படுகிறது. ஒரு வாகனத்துக்கு பின் ஒரு வாகனமாக வரிசை கட்டி நிற்க வேண்டிய சூழல் உள்ளது. ரவுண்டானா அமைக்கப்பட்ட பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டால், ஒட்டுமொத்த நகரம் முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து, நகரமே ஸ்தம்பித்து விடுகிறது. அதிலும், பண்டிகை, முகூர்த்த நாட்களில், அரசு விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசல் அதிகரிப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வாகன ஓட்டுநர்களும் படுசிரமத்துக்கு உள்ளாகினர். சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நகரில் நெரிசல் பிரச்னை தீராத தலைவலியாக மாறியுள்ளது. அதுவும், பண்டிகை, முகூர்த்த நாட்களில் நகரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு நெரிசல் பிரச்னை உள்ளது. வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால், அவசரத்துக்கு வரும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு கூட வழிவிட முடியாத நிலை உள்ளது. நகரில் விதிமுறை மீறி, ரோடுகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல் அதிகரித்துள்ளது. இதற்குரிய நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு, கூறினர்.