காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு; கபசுரக்குடிநீர் வழங்குங்க!
வால்பாறை : வால்பாறையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ள நிலையில், கபசுரக்குடிநீர் வழங்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறையில் பருவமழைக்கு பின், சிதோஷ்ண நிலை மாற்றத்தால் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னை அதிக அளவில் காணப்படுகிறது.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், காய்ச்சல் பாதிப்பால், அடிகடி விடுப்பு எடுப்பதாக பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.காய்ச்சல் பரவல் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு சென்றால், பிற மாணவர்களுக்கு தொற்று பரவி காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறையில் பருவமழைக்கு பின் வெயில், பனி, குளிர் நிலவுவதால், மக்கள் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். பள்ளி மாணவர்கள் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையிலும், தொற்றுப்பரவாமல் தடுக்கவும், அனைத்து பள்ளிகளிலும் நகராட்சி சார்பில் கபசுரக்குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.