அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு கடைகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகளால் கவலை
வால்பாறை ; வால்பாறையில், சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்ற அரசு துறை அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டுவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை நகரம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது. நகரில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள் அமைந்துள்ளன. நகரின் மத்தியில் பொள்ளாச்சி - வால்பாறை ரோடு அமைந்துள்ளது.ஒரு வழிப்பாதையாக இருப்பதால், இருசக்கர வாகனங்கள் முதல், கனரக வாகனங்கள் வரை இந்த ரோட்டில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சுற்றுலா பயணியரின் வாகனங்களும் அதிக அளவில் இந்த ரோட்டில் தான் இயக்கப்படுகின்றன.இது தவிர,வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் காந்திசிலை வரையிலும், சாலையோர ஆக்கிரமிப்புக்கடைகள் உள்ளன. வாகனங்களும் நிறுத்தப்படுவதால் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில், கடந்த பிப்., மாதம் கண்துடைப்புக்காக, வால்பாறை நகரில் ஆக்கிரமிப்புக்கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் மீண்டும் ஆக்கிரமிப்புக்கடைகள் வைக்கப்பட்டன.மக்கள் கூறியதாவது: வால்பாறை நகரில் ரோட்டை ஆக்கிரமித்து விதிமுறையை மீறி சிலர் கடைகள் வைத்துள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் நடந்து செல்லும் வழியில் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், மக்கள் ரோட்டில் நடந்து செல்லும் போது, விபத்தும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.எனவே, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி இணைந்து, வால்பாறை நகரில் விதிமுறையை மீறி வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை முழுமையாக அகற்ற வேண்டும். இவ்வாறு, கூறினர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது,'நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் தான், ஆக்கிரமிப்புக்கடைகள் இடம் உள்ளன. ஆனால், நகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டு, ரோட்டோர கடைகளுக்கு தினமும், 30 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கிறது. எனவே வால்பாறை நகரில் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது நகராட்சி நிர்வாகம் தான்,' என்றனர்.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஒவ்வொரு ஆக்கிரமிப்பு கடையின் பின்னணியிலும் ஆளும்கட்சி பிரமுகர்கள் இருக்கின்றனர். ஆளும்கட்சியினர் அழுத்தம் காரணமாகவே வால்பாறை நகரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படவில்லை,' என்றனர்.