கோவை கங்கா மருத்துவமனையில் இந்திய தசைக்கூட்டு சங்க மாநாடு
கோவை : கோவை கங்கா மருத்துவமனையில், 13வது இந்திய தசைக்கூட்டு சங்க வருடாந்திர மாநாடு நேற்று துவங்கியது. 'அனைவருக்கும் பொருத்தம்' என்ற தலைப்பில், நடப்பாண்டு நடக்கும் மாநாட்டில், தசைக்கூட்டு ஆரோக்கியத்தில் சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மாநாட்டு ஏற்பாட்டு தலைவர் பேராசிரியர் ராஜசேகரன் கூறுகையில், ''அனைத்து தசைக்கூட்டு நோய்களை கண்டறிவதில், கதிரியக்கவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், நுண்துளையீட்டு கதிரியக்கவியல் சிறந்த பலன் அளித்ததோடு, பொதுவான சிகிச்சையாகவும் மாறி விட்டது,'' என்றார். கங்கா மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறை தலைவர் புஷ்பா கூறுகையில், ''தசைக்கூட்டு பராமரிப்பு சிகிச்சையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட சிகிச்சைகளை அறிந்து கொள்வதே இதன் முக்கிய நோக்கம்,'' என்றார். இந்திய தசைக்கூட்டு சங்கத்தின் தலைவர் ஜெயராஜ் கோவிந்தராஜ் கூறுகையில், ''நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஒன்று கூடுவதற்கும், கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும், தசைக்கூட்டு மருத்துவத்தில் அதிநவீன நுட்பங்களை ஆராய்வதற்கும் ஒரு முக்கிய தளமாக, இந்த மாநாடு உள்ளது,'' என்றார். இரண்டாவது நாளாக இன்று, தசைக்கூட்டு கதிரியக்கவியல் நிபுணர்களின் தலைமையில், சிறப்பு அமர்வுகள் நடக்கின்றன.