அடிப்படை காரணம் தெரியாமல் இருமல் மருந்து வழங்குவது ஆபத்து இந்திய குழந்தைகள் நல டாக்டர்கள் சங்கம் எச்சரிக்கை
கோவை:'இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, ஆன்டிஹிஸ்டமின் மற்றும் டிகாஞ்சஸ்டன்ட் ஆகிய மூலக்கூறு சேர்க்கை கொண்ட இருமல் சிரப்புகளை வழங்குவது பரிந்துரைக்கப்படவில்லை. அடிப்படை காரணம் தெரியாமல், இருமல் மருந்து வழங்குவது ஆபத்தானது' என, இந்திய குழந்தைகள் நல டாக்டர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் என்கிற இருமல் மருந்து உட்கொண்ட, 15 குழந்தைகள் இறந்துள்ளனர். இதுதொடர்பான ஆய்வுகளை மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் மேற்கொள்கிறது. இருமல் மருந்துகள் டாக்டர்கள் பரிந்துரையின்றி பயன்படுத்தக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இதுகுறித்து, இந்திய குழந்தைகள் நலச்சங்க தமிழக கிளை தலைவர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது: குழந்தைகளிடம் குளிர்காலங்களில் இருமல் அதிகம் ஏற்படுகிறது. பெரும்பாலான இருமல் தானாக குணமடையும். வைரஸ் நோய்கள், அலர்ஜி, ஆஸ்துமா அல்லது இரைப்பை, உணவுக்குழாய் பிரச்னைகளாலும் இருமல் ஏற்படுகிறது. இருமல், அலர்ஜி அல்லது ஆஸ்துமா காரணமாக இருந்தால், ஆன்டிஹிஸ்டமின் மருந்துகள் அல்லது ப்ரொன்கோடைலேட்டர்கள் மூக்கு வழியாக அளிக்கும் இன்ஹேலர் பயன்படுத்தலாம். லெவோசெட்ரிசின் மற்றும் செட்ரிசின் சேர்க்கை கொண்ட ஆன்டிஹிஸ்டமின்கள், 6 மாதங்கள் கடந்த குழந்தைகளின், அலர்ஜி சார்ந்த இருமலுக்கு பாதுகாப்பானது. இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, குறிப்பாக, ஆன்டிஹிஸ்டமின் மற்றும் டிகாஞ்சஸ்டன்ட் சேர்க்கை கொண்ட இருமல் சிரப் வழங்குவது பரிந்துரைக்கப்படவில்லை. ஆன்டிஹிஸ்டமின்கள் மற்றும் ப்ரொன்கோடைலேட்டர்கள் போன்ற மருந்துகள், மிகவும் அவசியமான சூழ்நிலைகளில் மட்டுமே, கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் இருமலுக்கான அடிப்படை காரணம் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும். அதிக மருந்து பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். பெரியவர்களுக்கான இருமல் மருந்தை, குழந்தைகளுக்கு அளவு குறைத்துக் கொடுப்பது ஆபத்தானது. குழந்தைக்கு பாதிப்பின் தன்மை, எடை, உயரம் பொறுத்து மருந்துகள் மாற்றி வழங்கப்படும். மருந்து வழங்க, அதற்கான அளவு மூடியை பயன்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அளவு தெரியாமல் வழங்கக் கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.