பச்சிளங்குழந்தை ஆம்புலன்ஸ் ஜி.கே.என்.எம்.,ல் துவக்கம்
கோவை: ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில், கோடக் மஹிந்திரா குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் கீழ், அதிநவீன சி.டி., சிமுலேட்டர் மற்றும் பச்சிளம் குழந்தைகள் ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது.சிடி சிமுலேட்டருக்கு கோட்டக் மஹிந்திரா வங்கியும், பச்சிளம் குழந்தை ஆம்புலன் சேவைக்கு கோடக் மஹிந்திரா கேபிட்டல் கம்பெனியும் ஆதரவளித்தது.கோடக் மஹிந்திரா வங்கியின், உள் தணிக்கை தலைவர் அனந்த ராமன் மற்றும் ஜி.கே.என்.எம்., தலைமை நிர்வாக அதிகாரி ரகுபதி வேலுசாமி ஆகியோர் இணைந்து, இந்த வசதிகளைத் திறந்து வைத்தனர். ரகுபதி வேலுசாமி கூறுகையில், ''அதிநவீன சிடி சிமுலேட்டர், துல்லியமான கதிர்வீச்சு சிகிச்சை திட்டமிடலுக்கு உதவுவதுடன், ஆரோக்கியமான திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.அவசர சிகிச்சை தேவைப்படும் பச்சிளம் குழந்தைகளுக்காக, மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் நிபுணர்களை ஆம்புலன்ஸ் சேவை கொண்டுள்ளது,'' என்றார்.கோடக் மஹிந்திரா வங்கியின் அதிகாரிகள், ஜி.கே.என்.எம்., மருத்துவமனை நிர்வாகக் குழு, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.