மேலும் செய்திகள்
கார் திருடிய ஆக்டிங் டிரைவர் கைது
22-Aug-2025
கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில், ரூ. 24.61 கோடியில் கட்டமைப்பு வசதிகளை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில், மாநில அரசின் நிதி உதவியுடன் தனியார் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தின் கீழ் பணிகள் நடக்கின்றன. 316 ஏக்கர் பரப்பில், 585 தொழில் மனைகள் கொண்ட இத்தொழில் பேட்டையில், சிட்கோ வாயிலாக, இங்கு, ரூ. 24.61 கோடி செலவில், ரோடுகள் அமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் கடந்த, இரு ஆண்டுகளாக நடந்து முடிந்தன. முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். தொழிற்பேட்டையில் நடந்த விழாவில் கலெக்டர் பவன்குமார் பேசுகையில், ''இந்த தொழிற்பேட்டை வளாகத்தில், 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும். இதன் மூலம் தமிழகத்தின் முதல் பசுமை தொழிற்பேட்டையாக இது அமையும். இங்கு அமையும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மூலம், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி மேம்படும்,'' என்றார். சப் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே, தொழிற்பேட்டை அதிகாரி சுகந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
22-Aug-2025