நகராட்சி வளர்ச்சிப்பணிகள் நிர்வாக இயக்குனர் ஆய்வு
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி நகராட்சியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 148 லட்சம் ரூபாயில், தேர்நிலையம் மார்க்கெட்டில், 56 கடைகள் புதியதாக கட்டப்பட்டுள்ளன. மாட்டு சந்தையில், மாடுகள் நிறுத்தம் செய்வதற்காக, ஏழு ெஷட் அமைத்தல் உள்ளிட்ட பணிகள், 6 கோடியே, 39 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நடைபெறுகிறது.உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு திட்டத்தில், ஏழு கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.நகரில் நடைபெறும் இந்த வளர்ச்சிப்பணிகளை, நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.தொடர்ந்து, நல்லுார் குப்பை கிடங்கில், இரண்டு டன் எரியூட்டு இயந்திரத்தை பார்வையிட்டு, மக்காத கழிவுகளை எரியூட்டுவது; பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து எடுப்பதை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார்.அதன்பின், அழகாபுரி வீதி நுண் உயிர் உரம் தயாரிப்பு, உயிரி எரிவாயு மையத்தை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, நகராட்சி மண்டல இயக்குனர் இளங்கோ, கமிஷனர் கணேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.