இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கி சூடு; வடக்கு ஆர்.டி.ஓ., விசாரணை
கோவில்பாளையம்; டிரைவர், போலீஸ் இன்ஸ்பெக்டரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் குறித்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ., நேற்று விசாரணை நடத்தினார்.சரவணம்பட்டி, காபி கடை பகுதியைச் சேர்ந்தவர் ஹரி ஸ்ரீ, 23. டிரைவர். இவர் கடந்த வாரம் சக்திவேல் என்பவருடன் தகராறு செய்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். உடனே கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, காவலர் கார்த்தி ஆகியோர் ஹரி ஸ்ரீயை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்ய சென்றனர். முத்து கவுண்டன் புதூர் அருகே செல்லும்போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஹரிஸ்ரீ, இன்ஸ்பெக்டரை நோக்கி சுட்டார். துப்பாக்கி குண்டு போலீஸ் ஜீப் பம்பரில் பட்டு தெறித்தது.இன்ஸ்பெக்டர் இளங்கோ திருப்பி சுட்டதில், ஹரி ஸ்ரீ யின் இடது காலில் குண்டு பாய்ந்தது. கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு கண்காணிப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் இளங்கோ, காவலர் கார்த்தி மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹரி ஸ்ரீ ஆகியோரிடம், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் விசாரணை நடத்தினார். எந்த சூழ்நிலையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என விசாரித்தார்.துப்பாக்கி சூடு நடந்த இடத்திலும் ஆய்வு செய்தார். ஆர்.டி.ஓ., அறிக்கைக்கு பிறகு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.