உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவ, மாணவியரை தயார் செய்யுங்கள் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

மாணவ, மாணவியரை தயார் செய்யுங்கள் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

கோவை, ;'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டியில் அதிகமான மாணவ, மாணவியரை பங்கேற்க வைப்பதுடன், போதிய பயிற்சியை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வீரர், வீராங்கனைகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்தாண்டு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொது மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, ஐந்து பிரிவுகளில், 37 விளையாட்டுகள் மாவட்ட, மண்டல அளவில் நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க விரும்புவோர், http://sdat.tn.gov.in, http://cmtrophy.sdat.inஎன்ற இணையதள முகவரி வாயிலாக வரும், 16ம் தேதி மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(எஸ்.டி.ஏ.டி.,) தெரிவித்துள்ளது. இந்நிலையில், போட்டிக்கான முன்னேற்பாடுகள், வீரர், வீராங்கனைகளை ஊக்குவிப்பது குறித்து, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் மற்றும், 35க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களுடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக, நேற்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அப்போது பாலமுரளி பேசுகையில், ''கடந்தாண்டு நடந்த முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், மாநில அளவில் மூன்றாம் இடத்தை கோவை பிடித்தது. இந்த முறை பள்ளிகளில் மாணவ, மாணவியரை ஊக்குவித்து போட்டிகளில் பங்கேற்க வைக்க வேண்டும். போட்டிகளில் அதிகமானோர் வெற்றி பெற்று, மாநில அளவில் கோவையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். போதிய பயிற்சி அளித்து மாணவ, மாணவியரை தன்னம்பிக்கையுடன் தயார்ப்படுத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை