உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.80.48 கோடியில் சரவணம்பட்டியில் மேம்பாலம் மீண்டும் டெண்டர் கோர அறிவுறுத்தல்

ரூ.80.48 கோடியில் சரவணம்பட்டியில் மேம்பாலம் மீண்டும் டெண்டர் கோர அறிவுறுத்தல்

கோவை; சரவணம்பட்டியில், 1,415 மீட்டர் நீளத்துக்கு, ரூ.80.48 கோடியில் நான்கு வழி மேம்பாலம் கட்டுவதற்கு மீண்டும் டெண்டர் கோர, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.கோவை நகர்ப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சாயிபாபா காலனி, சிங்காநல்லுார், சரவணம்பட்டி ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், 2021-22 நிதியாண்டில் அனுமதி அளித்ததோடு, நிதி ஒதுக்கியது. டெண்டர் கோரப்பட்டு, பணிகள் துவங்க இருந்த சமயத்தில், 'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கு வழித்தடம் இறுதி செய்ய வேண்டியிருந்ததால், மேம்பாலத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.பல்வேறு தரப்பிலும் அழுத்தம் கொடுத்ததால், சாயிபாபா காலனி மற்றும் சிங்காநல்லுாரில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு, சென்னை 'மெட்ரோ ரயில்' நிறுவனம் தடையின்மை சான்று வழங்கியது. இதில், சாயிபாபா காலனியில் மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது; சிங்காநல்லுாரில் கட்டுவதற்கு டெண்டர் கோரப்பட்டது; ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றதால், மீண்டும் கோர முடிவு செய்யப்பட்டிருக்கிறது.சத்தி ரோட்டில் அம்மன் கோவிலில் துவங்கி சரவணம்பட்டி வரை, 1,415 மீட்டர் துாரத்துக்கு நான்கு வழிச்சாலையாக மேம்பாலம் அமையும்; திட்ட மதிப்பீடு ரூ.80.48 கோடி. மொத்தம், 31 கண்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும்; தலா, 7.5 மீட்டர் அகலத்துடன் ஓடுதளம் அமைக்க வேண்டும்.

மெட்ரோ ரயில் எப்போது?

'மெட்ரோ ரயில்' வழித்தடத்தை காரணம் கூறியதால், முதல் டெண்டர் ரத்து செய்யப்பட்டது.கோவையில் இரு வழித்தடங்களில் செயல்படுத்த உத்தேசித்துள்ள 'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்னும் சமர்ப்பிக்கவில்லை. அறிக்கை சமர்ப்பித்தபின், மத்திய அரசு ஆய்வு செய்து, நிதி ஒதுக்கீடு செய்வதற்கும், செயலாக்கத்துக்கு கொண்டு வருவதற்கும் பல ஆண்டுகளாகும் என்பதால், மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மீண்டும் டெண்டர் கோர, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மண்டல அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தடையின்மை சான்று பெற்றுத்தர, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் முதன்மை செயலரிடம், தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் கோரியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை