மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறியும் பயிற்றுநர்கள்
பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிய, கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வடக்கு வட்டார வளமையத்தின் ஒரு பகுதியில், ஆதார மையத்தில் சேர்த்து பயிற்சி வழங்கப்படுகிறது.மேலும், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, வடக்கு ஒன்றியம், வட்டார வள மைய சிறப்பு பயிற்றுநர்கள், ஏப் மற்றும் மே மாதங்களில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வீட்டு வழி பயிற்சி அளிக்கின்றனர்.அங்கன்வாடி மற்றும் பள்ளி சார்ந்த பகுதிகளில், 18 வயதுக்குள் உள்ள மாற்றுத்திறன் மாணவர்கள் உள்ளனரா என கண்டறியும் பணி மேற்கொள்ளப்படுகிறது.அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் தேவையான ஆவணங்கள் பெறுவதற்கான வழிகாட்டுதல், பெற்றோருக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.மேலும், அவர்களை பள்ளியில் சேர்த்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.