மருத்துவ காப்பீடு தொகை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
கோவை; மருத்துவ காப்பீடு தொகை வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு, நுகர் வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை, உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், ஸ்டார் ெஹல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், குடும்ப மருத்துவ காப்பீடு செய்திருந்தார். இதற்கான பிரீமியம் தொகை, 33,796 ரூபாய் செலுத்தினார்.இதற்கிடையில், ராமமூர்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு குடலிறக்க நோய் பாதிப்பு இருந்ததால், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான செலவு தொகை, 1.02 லட்சம் ரூபாய் வழங்க கோரி விண்ணப்பித்தார். ஆனால், நோய் பாதிப்பு இருந்ததை மறைத்து, மருத்துவ காப்பீடு செய்ததாக கூறி, ராமமூர்த்திக்கு மருத்துவ சிகிச்சை தொகை வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்தது. மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேரும் போது, நோய் பாதிப்பு இல்லை என்பதற்கான மருத்துவரின் அறிக்கை கொடுத்தும் ஏற்கவில்லை. பாதிக்கப்பட்ட ராமமூர்த்தி, மருத்துவ சிகிச்சை தொகை மற்றும் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டதால், மனுதாரர் சிகிச்சை பெற்ற தொகை, 1.02 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.