உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிகிச்சை கட்டணம் வழங்குமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு

சிகிச்சை கட்டணம் வழங்குமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு

கோவை; தனியார் மருத்துவமனையில், இருதய சிகிச்சை மேற்கொண்டவருக்கு, மருத்துவ செலவுத்தொகை வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. குனியமுத்துார், வசந்தம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் இளங்கோ,62; ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். ஆதித்யா பிர்லா ெஹல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 2020, பிப்., 29ல் மருத்துவ காப்பீடு செய்திருந்தார். அதற்கான பிரீமிய தொகை, 14,603 ரூபாய் செலுத்தினார். இந்நிலையில், பாஸ்கர் இளங்கோ, தீவிர மாரடைப்பு சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனையில், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, 10 நாட்கள் சிகிச்சை பெற்றார். மருத்துவ சிகிச்சை தொகை, 3.42 லட்சம் ரூபாய் வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். ஏற்கனவே நோய் பாதிப்பு இருந்ததை மறைத்து, மருத்துவ காப்பீடு செய்துள்ளதாக கூறி, பணம் வழங்காமல் விண்ணப்பத்தை, இன்சூரன்ஸ் நிறுவனம் நிராகரித்தது. பாதிக்கப்பட்ட மனுதாரர், மருத்துவ சிகிச்சை தொகை மற்றும் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரருக்கு மருத்துவ செலவு தொகை, 3.42 லட்சம் ரூபாய், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி