மத்திய அரசு நிதியில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், 20 கோடி ரூபாய் செலவில், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்ட, மருத்துவமனை வளாகத்தில் பூமி பூஜை நடந்தது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்பராஸ்டிரச்சர் மிஷன் திட்டத்தின் வாயிலாக ஒதுக்கப்பட்ட நிதியில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட உள்ளது. விழாவுக்கு கோவை மாவட்ட மருந்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குனர் டாக்டர் சுமதி தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் கார்த்திக் மகாராஜன் வரவேற்றார். எம்.பி., ராஜா, மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆகியோர் பூமி பூஜையில் பங்கேற்று, கட்டுமான பணிகளை துவக்கி வைத்தனர். இவ்விழாவில் தேசிய சுகாதார இயக்கத்தின் டாக்டர் வெங்கடேஷ், மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். விழா முடிந்து சிறிது நேரத்திற்கு பின், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவர் தனியாக பூமி பூஜை செய்தார்.