மரம் வெட்டுவதில் ஆர்வம்; குழியை மூடுவதில் இல்லை
மேட்டுப்பாளையம்; அன்னுார் சாலை விரிவாக்க பணிகளுக்காக, ஓரத்தில் உள்ள மரங்களை வெட்டுவதில், ஒப்பந்த பணியாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் மரங்களை வெட்ட தோண்டிய குழிகளை, மூடுவதற்கும், வேர்களை முழுமையாக அகற்றவும், ஆர்வம் காட்டுவதில்லை. மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி வரை உள்ள, இரு வழி சாலையை, மாநில நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம், நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சாலையின் ஓரங்களில் இருந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டது. மரங்களை வெட்டும் பணிகளில், டெண்டர் எடுத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லை வரை உள்ள மரங்களை, வெட்டி முடித்துள்ளனர். அன்னூர் சாலையில் நடூர் பஸ் ஸ்டாப் அருகே இருந்த மரத்தை வெட்டினர். அந்த மரத்தை வெட்ட தோண்டிய குழியை, ஐந்து நாட்களுக்கு மேலாகியும், இன்னும் மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். மண் குவியல் சாலையில் பாதி அளவு வரை உள்ளது. இதனால் இந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, இரவில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர். இதே போன்று நடூர் விநாயகர் கோவில் அருகே தோண்டிய குழியையும் சரியாக மூடாமல் உள்ளனர். மரங்களை வெட்டி ஒரு மாதம் ஆகியும், சாலையின் ஓரத்தில் உள்ள வேர்ப்பகுதிகளை தோண்டாமல் அப்படியே விட்டுள்ளனர். இதுகுறித்து நடூர் பகுதி மக்கள் கூறுகையில், ''சாலை விரிவாக்க பணிகளின் போது, குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இன்னும் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்காமல் உள்ளனர். இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வராததால், மக்கள் அவதி படுகின்றனர். டெண்டர் எடுத்தவர் மரங்களை வெட்டுவதில் காட்டும் ஆர்வம், குழியை மூடுவதிலும், வேர்களை அகற்றுவதிலும், ஆர்வம் காட்டுவதில்லை. பெரிய விபத்துக்கு ஏற்படுவதற்கு முன்பாக நடூரில் உள்ள குழியை மூடவும், மரத்தின் வேர் பகுதியை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.