அரசு மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சை!
பொள்ளாச்சி; கிணத்துக்கடவு அருகே வடசித்துாரில், மேற்கு வங்கத்தை சேர்ந்த ரஜினிசிங், 46, குடும்பத்துடன், தங்கி சென்டரிங் வேலைக்கு சென்று வருகிறார்.இவருக்கு, வயிற்று வலி இருந்ததால், நேற்றுமுன்தினம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார்.அவரை பரிசோதித்த போது, குடல் செயல் இழந்து, மலம் கழிக்காமல் வயிறு வீங்கி இருப்பதை கண்டறிந்த டாக்டர்கள், உடனடியாக அவசர அறுவை சிகிச்சை தேவை எனவும் அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து, அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் கார்த்திக்கேயன், முருகேசன், சங்கமித்ரா, மயக்க மருந்து குழு டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் நவாஸ் மற்றும் மேற்படிப்பு மாணவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.அவருக்கு, மலக்குடலில் நான்கரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா கூறுகையில், ''அரசு மருத்துவமனையில், வயிற்று வலியுடன் வந்த நபரை பரிசோதித்து அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது.தற்போது அந்த நபர் நலமுடன் உள்ளார். போதிய வசதிகள் மருத்துவமனையில் உள்ளது,'' என்றார்.