உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஈரான் --- இஸ்ரேல் போரால் ஏற்றுமதி பாதிப்பு தேயிலை துாள் விற்பனை, விலை சரிவு

ஈரான் --- இஸ்ரேல் போரால் ஏற்றுமதி பாதிப்பு தேயிலை துாள் விற்பனை, விலை சரிவு

குன்னுார்:ஈரான்- இஸ்ரேல் போர் காரணமாக, தேயிலை துாள் ஏற்றுமதி பாதித்துள்ளதால, விற்பனை மற்றும் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.உலகின், 2வது பெரிய தேயிலை உற்பத்தியாளராக விளங்கும், நம் நாட்டில், அசாம், டார்ஜிலிங், நீலகிரி தேயிலை துாள் உள்ளூர் மட்டுமின்றி, ஏற்றுமதிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. இந்நிலையில், ஈரான் -இஸ்ரேல் போர் காரணமாக, ஈரான் நாட்டிற்கு தேயிலை துாள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க (உபாசி) செயலர் சஞ்சித் கூறுகையில், ''நம் நாட்டில், 18 கோடி கிலோ 'ஆர்த்தோடக்ஸ்' தேயிலை துாள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தென் மாநிலங்களில், 35 சதவீதம் பங்கு உள்ளது.நீலகிரியில் பெரும்பாலான எஸ்டேட்களில் இந்த ரகம் அதிகம் உற்பத்தியாகிறது. ஈரான் நாட்டில், அதிகம் ஆர்த்தோடக்ஸ் ரகம் வாங்குகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, 4 கோடி கிலோ வரை நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த, 2024ல் ஒரு கோடி கிலோ தேயிலை துாள் ஏற்றுமதியானது.தற்போது, போர் காரணமாக தேயிலை துாள் வாங்க, வர்த்தகர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் விற்பனை, விலை சரிந்து வருகிறது. சுமுக நிலை ஏற்பட்டு விரைவில், ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்புக்கு எதிர்பார்த்துள்ளோம்,'' என்றார்.தேயிலை வாரிய துணை தலைவர் ராஜேஷ் சந்தர் கூறுகையில், ''நம் நாட்டில் மொத்தம், 25 கோடி கிலோ தேயிலை துாள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. போர் காரணமாக, ஈரான் மட்டுமின்றி அருகில் உள்ள கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. தென் மாநில தேயிலை துாள் வெளிநாடுகளுக்கு, 40 சதவீதம் ஏற்றுமதியாகும் நிலையில், தேயிலை விற்பனை; விலை நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை