தண்டவாள பகுதியில் இரும்பு தடுப்பு அமைப்பு
சூலுார்; ராவத்துாரில் தண்டவாளத்தை ஒட்டி, இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது. கோவையில் இருந்து திருப்பூருக்கு, இருகூர், ராவத்துார், முத்துக்கவுண்டன்புதுார், ராசி பாளையம், மாதப்பூர், ராமாச்சியம்பாளையம், சோமனுார் வழியாக தண்டவாளம் உள்ளன. இருபுறங்களிலும் இதுவரை தடுப்புகள் இல்லை. இதனால், ஆடு, மாடுகள் மேய்ப்போர் அடிக்கடி தண்டவாளத்தை கடந்து செல்வது வழக்கம். இதேபோல், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில், தண்டவாளத்தில் அமர்ந்து கல்லுாரி மாணவர்கள் ஷெல்பி எடுத்துக்கொள்வதும், மது அருந்துவதும் வழக்கமாக இருந்து வந்தது. ராவத்துார் - நீலம்பூர் பை பாஸ் ரோட்டில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இரவில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய நான்கு மாணவர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.அப்போதிருந்து, இரு புறமும் தடுப்புகள் அமைக்க வேண்டும், என, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ராவத்துார் ரோட்டில், தண்டவாளத்தின் வடபுறம் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மற்ற பகுதிகளிலும் இப்பணி நடந்துள்ளது. இதனால், ஆடு, மாடுகள் மற்றும் பொதுமக்கள் ரயில் ரோட்டை கடந்து செல்வது தடுக்கப்படும். விபத்துகளும் குறையும்.