பகலில் நீர்பாசனம் செய்யுங்கள்: மின்சாரவாரியம் வேண்டுகோள்
கோவை; விவசாயிகள் விளைபயிர்களுக்கு, பகல் நேரத்தில் நீர்பாசனம் மேற்கொள்ள வேண்டும் என, மின்சார வாரியம் வேண்டு கோள் விடுத்துள்ளது. இது குறித்து, கோவை மின் பகிர்மான வட்டம் தெற்கு மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு பொறியாளர் சுப்ரமணியம் கூறியதாவது:பயிர்களுக்கு, விவசாயிகள் இரவு நேரத்தில் நீர் பாசனத்தை மேற்கொண்டிருப்பர். தற்போது பகல் நேரத்தில் புதுப்பிக்கக்கூடிய, இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த சூரிய ஒளி மின்சாரத்தை, விவசாயிகள் அதிகமாக பயன்படுத்துவதன் வாயிலாக, பசுமை ஆற்றல் ஊக்குவிக்கப்படும். இது, பிற வளங்களை கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும்போது ஏற்படும் மாசுபாட்டின் அளவை குறைக்கவும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்லவும் உதவும்.அதற்கேற்ப, பகலில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை, முழுமையாக பயன்படுத்திட, அனைத்து விவசாயிகளும் இயன்றவரை விவசாய மின்மோட்டார்களை பகல் நேரங்களில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு, சுப்ரமணியம் கூறினார்.