உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் கடைகளில் மளிகை வாங்குவது கட்டாயமா? கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விளக்கம்

ரேஷன் கடைகளில் மளிகை வாங்குவது கட்டாயமா? கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விளக்கம்

- நமது நிருபர் -'கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில், கூட்டுறவு தயாரிப்புகள், விவசாய வேளாண் பொருட்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் அனுமதிக்கப்பட்ட மளிகை பொருட்களை விற்பனை செய்யலாம்' என, கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டத்தில், 1,548 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.இப்போது ரேஷன்கடைகளில் தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் மசாலாப்பொடி, டீ துாள், உப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும், விற்பனை செய்யுமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக ரேஷன் கடை ஊழியர்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.விற்பனையாகாத பொருட்களை 'ரிட்டர்ன்' எடுக்காமல், அந்த பொருட்களுக்கான தொகையை ரேஷன்கடை ஊழியர்கள் செலுத்த வேண்டும் என, அதிகாரிகள் வலியுறுத்துவதாகவும் புகார் தெரிவித்து இருந்தனர்.இது குறித்து, கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி கூறியிருப்பதாவது:கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில், கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நடத்தப்படும் ரேஷன்கடைகளில் கூட்டுறவு தயாரிப்புகள், விவசாய வேளாண் பொருட்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் மளிகை பொருட்கள் அனுமதிக்கப்படுகின்றன.கூட்டுறவு சங்கங்களின் முன்னேற்றத்துக்காகவும், லாபத்துக்காகவும், சங்க செலவினத்தை குறைக்கவும், அரசிடம் இருந்து பெறும் மானியத்தை குறைத்திடும் நோக்கத்தில், மசாலாப்பொடி, டீ துாள், உப்பு, சோப்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன்கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பொருட்களை, ரேஷன்கார்டுதாரர்கள் தேவைப்பட்டால் வாங்கலாம்; கட்டாயமில்லை.ரேஷன்கடை ஊழியர்கள், விற்பனையாகாத பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்களை திருப்பிக் கொடுத்து விடலாம்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ