உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுரங்க பாலம் பணி கைவிடப்பட்டதா? மாற்று வழியில்லாமல் திணறும் மக்கள்

சுரங்க பாலம் பணி கைவிடப்பட்டதா? மாற்று வழியில்லாமல் திணறும் மக்கள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, வடுகபாளையம் பிரிவில், சுரங்க நடை பாதை பாலம் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், புதர் மண்டி காணப்படுகிறது. பொள்ளாச்சி – பாலக்காடு ரோட்டில், போக்குவரத்து வசதிக்காக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், வடுகபாளையம் பகுதி மக்கள் பொள்ளாச்சி வந்து செல்லும் வகையில், பாலக்காடு ரோட்டில் நடைபாதை சுரங்க பாலம் அமைக்க ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, சில ஆண்டுகளுக்கு முன் பணிகள் துவங்கப்பட்டது. அப்போது பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சுரங்கவழி நடைபாதையாக அமைக்காமல், வாகனங்கள் சென்று வர ஏதுவாக அமைக்க வேண்டும். வடுகபாளையம் ரயில் கேட் மூடப்பட்டால், வடுகபாளையம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள், சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படும். எனவே, அங்கு இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு வசதியாக சுரங்க பாதை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும், என வலியுறுத்தினர். இந்நிலையில், நடைபாதை சுரங்க பாலம் அமைக்கும் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன், பாதியிலேயே கைவிடப்பட்டதால், அவ்விடம் புதர் மண்டி காணப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சுரங்க நடைபாதை பாலம் கட்டும் பணிகள் முழு அளவில் மேற்கொள்ளாமல் பாதியிலேயே நிற்கிறது. முழுமை பெறாத இடம் முழுவதும் புதர்கள் மண்டி, விஷ பூச்சிகளின் வாழ்விடமாக மாறியுள்ளது. பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகியுள்ளது. தற்போது அந்த இடம் சமூக விரோத செயல்களின் கூடாரமாகவும் மாறியுள்ளது. தற்போது, வடுகபாளையம் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக ஒரு மாதம் மூடப்பட்டுள்ளது. மற்றொரு வழித்தடத்தில் உள்ள பாலமும் குறுகலாக இருப்பதுடன், பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதால், மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், இந்த பாலம் பணிகளை நிறைவு செய்தால், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, சுரங்க நடைபாதை பாலத்தை, வாகனங்கள் சென்று வரும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !