உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  யானை திடீரென இறப்பு: சிகிச்சை அளித்ததில் சிக்கலா?

 யானை திடீரென இறப்பு: சிகிச்சை அளித்ததில் சிக்கலா?

வால்பாறை: அதிரப்பள்ளி ரோட்டில், காலில் காயமடைந்த யானை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி அருவி அமைந்துள்ளது. இங்கு, சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில், செப்., 19ல் காலடி தோட்டப்பகுதியில், 15 வயது ஆண் யானை, காலில் காயம் ஏற்பட்ட நிலையில் நடந்து செல்வதை வனத்துறையினர் கண்காணித்தனர். காயத்துடன் சுற்றிய யானைக்கு, மயக்க ஊசி செலுத்தி பிடித்து, காலில் இருந்த காயத்துக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் யானை உயிரிழந்தது. வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பிற யானைகள் தாக்கியதில், அந்த யானை இறந்திருக்கலாம். பிரேத பரிசோதனைக்கு பின் உண்மையான காரணம் தெரிய வரும்' என்றனர். மயக்க ஊசி காரணமா? அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் தலையில் காயமடைந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்தனர். அதன் பின், அந்த யானை கோடநாடு யானை பராமரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அந்த யானை சில நாட்களிலேயே உயிரிழந்தது. தற்போது, காலில் காயமடைந்த யானைக்கு தொடர்ந்து மூன்று முறை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்தனர். அந்த யானையும் தற்போது இறந்தது. யானை இறப்புக்கு மயக்க ஊசி அதிக முறை செலுத்தியது காரணமாக இருக்கலாம் என, இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ