ஈஷா யோகா ரதங்கள் அன்னுார் வருகை
அன்னுார் ; மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா ரதங்கள் இன்று அன்னுார் வருகின்றன. கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் சத்குரு நிறுவிய ஈஷா யோக மையம் உள்ளது. இங்கு மகா சிவராத்திரி விழா வருகிற 25, 26, 27 ஆகிய மூன்று நாட்கள் கொண்டாடப்பட உள்ளன.இதற்காக சென்னை உள்ளிட்ட பகுதியில் இருந்து 63 நாயன்மார்கள் வீற்றிருக்கும் ரதமும், ஆதியோகி சிவபெருமான் வீற்றிருக்கும் ரதமும் பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஈஷா யோக மையத்திற்கு செல்கின்றன. இதில் திருப்பூரில் இருந்து வரும் ரதம் இன்று மாலை 4:00 மணிக்கு சொக்கம்பாளையம் வழியாக அன்னுார் தாசபளஞ்சிக மண்டபத்திற்கு வருகிறது.நாளை (21ம் தேதி) காலை 5:00 மணிக்கு அன்னுாரில் இருந்து புறப்பட்டு சிவாங்கர்கள் பாதயாத்திரை உடன் ஜீவா நகர், பொகலூர் வழியாக மதியம் தேரம்பாளையம் நால் ரோட்டை அடைகிறது. பின்னர் காரமடை, பெரிநாயக்கன்பாளையம் வழியாக 24ம் தேதி ஈஷா யோக மையத்தை அடைகிறது. சென்னையில் இருந்து புறப்பட்டு வரும் மற்றொரு ரதம் சிவாங்கர்கள் பாதயாத்திரை உடன் இன்று மதியம் 1:00 மணிக்கு கோவை மாவட்ட எல்லைக்கு வருகிறது. பசூரில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு குமாரபாளையத்தில் வழிபாடு நடக்கிறது.நாளை 21ம் தேதி காலை குமாரபாளையத்தில் இருந்து சென்னப்ப செட்டி புதூர் சென்று இரவு கோவில்பாளையம் குமரன் மகாலை அடைகிறது.கோவில்பாளையத்திலிருந்து சரவணம்பட்டி வழியாக 24ம் தேதி ஈஷா யோக மையம் சென்றடைகிறது.