தேர்ச்சி அடிப்படையில் டிசி வழங்கல்; மாணவர் சேர்க்கைக்கு ஆயத்தம்
பொள்ளாச்சி; மே மாதம் முதல் வாரத்தில், 5, 8, மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் 'டிசி' வழங்கியவுடன், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில், பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிந்துள்ள நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ல் நிறைவடைகிறது.தொடர்ந்து, 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வு, வரும் 24ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கோடை விடுமுறை அளிக்கப்படும். அதேநேரம், இம்மாதம், 30ம் தேதி வரை, ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வரவழைக்கப்படுவர். மே மாதம் முதல் வாரத்தில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டால், அதற்கேற்ப மாணவர் சேர்க்கை தீவிரப்படுத்தப்படவும் உள்ளது.பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:நகர் மற்றும் கிராமங்களில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களை, அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்களை ஆசிரியர்கள் அறிவுறுத்துவர்.குறிப்பாக, மே மாதம், முதல் வாரத்தில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 5, 8, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 'டிசி' வழங்கப்படும். அப்போதே 'ஸ்பாட் அட்மிஷன்' வழங்கவும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.தேர்ச்சி அடிப்படையில், 'எமிஸ்' தளத்தில், 'புரமோஷன்' வழங்கப்படும். அந்த விபரம் 'காமன் போலில்' வைக்கப்படும். பின்னர், மாணவர் சேர்க்கை முறையாக உறுதிப்படுத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.