உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளையாட்டுப் போட்டிக்கான நிதி தனி கணக்கில் விடுவிப்பது அவசியம்

விளையாட்டுப் போட்டிக்கான நிதி தனி கணக்கில் விடுவிப்பது அவசியம்

கோவை; அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளுக்கான நிதியை, பள்ளியின் பொதுக்கணக்கில் விடுவிப்பதற்கு பதிலாக, தனி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு முன் நாட்டு நலப்பணித்திட்டம், சாரண - சாரணியர் இயக்கம் போன்ற திட்டங்களுக்கு தனித்தனியாக நிதி வழங்கப்பட்டது. மாணவர்களிடம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை வசூலித்து, விளையாட்டுக்கான தனி கணக்கில் வைக்கப்பட்டது. தலைமையாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் இணைந்து அந்நிதியை நிர்வகித்து, விளையாட்டுப் போட்டிகளுக்கான போக்குவரத்து, உணவு உள்ளிட்ட செலவினங்களுக்கு பயன்படுத்தினர். தற்போது மாணவர்களிடம் பணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டு, அனைத்து நிதியும் பள்ளியின் பொதுக்கணக்கில் விடுவிக்கப்படுகின்றன. விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, பள்ளியின் இதர செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், 'விளையாட்டுப் போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல, ஒரு மாணவருக்கு ரூ.125 செலவு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு, தங்குமிடம் போன்ற பிற செலவு அதிகம். 'ஸ்பான்சர்' மூலம் சில போட்டிகளுக்கு மட்டுமே, மாணவர்களை அழைத்துச் செல்ல முடிகிறது. விளையாட்டு நிதியை தனி கணக்கில் விடுவித்தால், தலைமையாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் இடையே கருத்து வேறுபாடு இல்லாமல், உடற்கல்விப் பணிகள் தொய்வின்றி நடைபெறும். இது, மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், போட்டிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் உதவும்' என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ