போஸ்டரால் அலங்கோலமான அரசு சுவர் நடவடிக்கை எடுப்பது அவசியம்
பொள்ளாச்சி ;பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனத்தார், அரசு சுவர்களில் விளம்பரம் எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அரசுக்கு சொந்தமான கட்டடங்கள், சுற்றுச்சுவர்கள், பாலங்களில் எந்தவிதமான விளம்பரங்களும் எழுதவும், போஸ்டர் ஒட்டவும் கூடாது என விதிமுறை உள்ளது.இதற்காக, அரசுத்துறை அலுவலக சுற்றுச்சுவர்களில், உரிய துறை தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள், திட்ட செயல்பாடுகள் என எழுதும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அதேபோன்று, பொள்ளாச்சி நகராட்சி பகுதியிலுள்ள அரசு சுவர்களில், அரசியல் கட்சிகள், தனியார் விளம்பரம் எழுதக்கூடாது. தடையை மீறி விளம்பரம் எழுதுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், பொள்ளாச்சி நகரில், எதையும் பொருட்படுத்தாமல், அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனத்தார் பலரும், தங்களது விருப்பம் போல, போஸ்டர் ஒட்டுவதையும், விளம்பரம் எழுதுவதையும் வழக்கமாகக்கொண்டுள்ளனர்.குறிப்பாக, நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே பாலம், நடை மேம்பாலம், போக்குவரத்து ரவுண்டானா, சென்டர்மீடியன் ஆகியவற்றில், அரசியல் கட்சியினர் தங்கள் நிகழ்ச்சிகள், முக்கிய பிரமுகர்கள் பிறந்த நாள், தலைவர்கள் வருகை என கொடிகள், பேனர்கள், போஸ்டர்கள் வைப்பதில் போட்டா போட்டி நடத்துகின்றனர்.கட்சி நிகழ்ச்சிகளுக்கு அரசு சுவர்களில் விளம்பரம் எழுதப்படுகிறது. இதுதவிர, பாலக்காடு ரோடு, கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் பிரதான கட்சியினர் விளம்பரம் எழுதுவதை வழக்கமாகக்கொண்டுள்ளனர்.தன்னார்வலர்கள் கூறியதாவது:அரசுக்கு சொந்தமான பல கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவர்களில் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது. இத்தகைய விதிமீறல், வாகனங்களில் செல்வோரின் கவனம் சிதறி விபத்துக்கு வழிவகுக்கும். இதனை தடுக்க, துறை ரீதியான அதிகாரிகளின் நடவடிக்கை அவசியம்.இவ்வாறு, கூறினர்.