உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பார்க்க புதுசு; உள்ளே எல்லாமே பழசு!

பார்க்க புதுசு; உள்ளே எல்லாமே பழசு!

அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சி கிளை 1ல், 26 புறநகர் பஸ், 34 டவுன் பஸ்; கிளை 2ல், 32 புறநகர், 35 டவுன் பஸ்கள்; கிளை, 3ல், 28 புறநகர், 32 டவுன்பஸ்கள் என, தினமும், 187 பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதுதவிர, பழநி, திருப்பூர் என பிற கிளைகளில் இருந்து, 60 பஸ்கள், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றன. ஒவ்வொரு பஸ்சும், நாளொன்றுக்கு, மூன்று முறை வந்து செல்கின்றன. அவ்வகையில், தொலைதுார ஊர்களுக்கு புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன.பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து மட்டுமே தினமும், 1,400 முறை பஸ்கள் வெளியேற்றப்படுகின்றன. சராசரியாக, 77 ஆயிரம் பயணியர் வந்து செல்கின்றனர். இதேபோல, புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, சராசரியாக, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணியர் வருகை புரிகின்றனர்.இந்நிலையில், 'ரீ பாடி' கட்டப்பட்டு புது பொலிவுடனும் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால், பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், 'என்ன தான் ரீ பாடி பஸ்சை புதுசா காண்பித்தாலும் உள்ள இருக்கிற ஸ்பேர் பார்ட்ஸ் பழசா தானே இருக்கு; அதனால், வழியில திடீர்னு பஸ் மக்கர் ஆச்சுன்னா, எங்க பாடு திண்டாட்டம்தான்,' என புலம்புகின்றனர்.இது ஒருபுறமிருக்க, கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் சில டவுன் பஸ்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளன.'செல்ப் மோட்டார்' பிரச்னை காரணமாக, காலையில் இன்ஜின் இயக்கப்பட்டதால், இரவு பணிமனைக்கு கொண்டு செல்லும் வரை 'ஆப்' செய்ய முடிவதில்லை.தவறுதலாக, பஸ் இன்ஜின் நின்று விட்டால், பயணியர் உதவியுடன் பஸ்சை தள்ளி 'ஸ்டார்ட்' செய்யும் நிலை ஏற்படுகிறது. குறிப்பிட்ட, சில டவுன் பஸ்களில், இருக்கையில் அமர்ந்து பயணிப்பதும் சவாலாக உள்ளது. இருக்கை விழாமல் இருக்க கயிறு கட்டப்பட்டுள்ளது. ஜன்னல் கம்பி பெயர்ந்து எப்போது வேண்டுமென்றாலும் விழும் நிலையிலும், கண்களை பதம் பார்க்கும் நிலையிலும் உள்ளன.பழைய பஸ்களில் படிக்கட்டுகள் சேதமடைந்து அபாயகரமாக உள்ளன. பெரும்பாலான பஸ்களில் முதலுதவி பெட்டி இருக்கு; மருந்துகள் இல்லை. சில பஸ்களில் முதலுதவி பெட்டியே இல்லை.மோட்டார் வாகன சட்டத்தின்படி, 15 ஆண்டுகள் நிறைவடைந்த வாகனங்களின் பதிவானது ரத்து செய்யப்பட்டு, அதன் பிறகு அவை கழிவு வாகன கணக்கில் சேர்க்கப்படுகிறது. இதனால், மக்களுடைய பாதுகாப்பு உறுதி செய்வதுடன், விபத்து ஏற்படுவதை தடுக்க முடியும்.காலாவதியான பஸ்களை இயக்குவதால்; நடுவழியில் பயணியர் இறக்கி விடப்படும் நிலை இன்னும் பல டவுன்பஸ்களில் நீடிக்கிறது. டவுன் பஸ்களின் நிலை அந்தளவுக்கு பரிதாபகரமாக உள்ளது. முற்றிலும் பழுதடைந்த பல பஸ்களுக்கு பட்டி, டிங்கரிங் பார்த்து இயக்கப்படுவதால், டிரைவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

பாதியில் நிறுத்தம்

கிணத்துக்கடவு பகுதியில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் பெரும்பாலானவை பழைய பஸ்களாக உள்ளன. இதில், சீட் கிழிந்தும், கம்பி உடைந்தும், ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தும் காணப்படுகின்றன.மேலும், பிற மாவட்டம் அல்லது வேறு ஊர்களில் பயன்படுத்தப்பட்ட பஸ்கள் உள்ளூரில் இயக்கப்படுகிறது. உருக்குலைந்த பஸ்களை கிராமங்களுக்கு இயக்குவதால், அடிக்கடி பழுதடைந்து வழித்தடத்தில் பாதியில் நின்று விடுகின்றன. இதனால், கிராம மக்கள் பாதிக்கின்றனர். பழைய, காலாவதியான பஸ்களை மாற்றி, புதிய பஸ்களை இயக்க வேண்டும்.

'ஸ்பேர் பார்ட்ஸ்' வாங்க தலைமைக்கு போகணும்!

அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:அரசு, படிப்படியாக புதிய பஸ்களை வழங்கி வருவதால், அதற்கேற்ப பழைய பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. ஸ்பேர் பார்ட்ஸ் புதிதாக வாங்க வேண்டுமானால், தலைமை அலுவலகத்திற்கு தகவல் அனுப்பியே பெற முடியும்.அதனால், டிரைவர்கள் எழுதி வைக்கும் பழுது புகார்களை உடனுக்குடன் சரி செய்ய முடிவதில்லை.பணிமனையில் உள்ள புதுப்பித்தல் பிரிவில், உதிரி பாகங்கள் உள்ளன. ஏர் பில்டர், ஆயில் பில்டர், டீசல் பில்டர், லைனிங் உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே புதிதாக வழங்கப்படுகின்றன. மற்ற உதிரி பாகங்களுக்கு, பழைய 'ஸ்பேர்ஸ்'களை சீரமைத்து பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.வால்பாறையில் இயக்கப்பட்ட பழைய பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. சில எஸ்டேட்களில் ரோடுகள் சரியில்லாததால் பழைய பஸ்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது. விரைவில் புதிய பஸ்களாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.உடுமலை கிளை பராமரிப்பில் உள்ள பஸ்களில், அரசு வழிகாட்டுதல்படி பயணியர் பாதுகாப்பிற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான பஸ்களுக்கு தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது. வழித்தடத்தில் பழுதாகி நிற்கும் பஸ்கள் உடனடியாக சீரமைத்து இயக்கப்படுகிறது. கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கூறினர். - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Yes your honor
மே 04, 2025 09:35

எந்தக் கொம்பனாலும் குறைசொல்லமுடியாத ஆட்சி என்றது ஒரு வெத்து உருட்டல் என்பதற்கு, தமிழகத்தின் இன்றைய அவல நிலையே சாட்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை