உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு சைக்கிள்தானே...இந்தாம்மா ஓட்டு!

ஒரு சைக்கிள்தானே...இந்தாம்மா ஓட்டு!

ஏழாம் வகுப்பு மாணவியின் சைக்கிள் காணாமல் போனது. தலைமை ஆசிரியர் கவனத்துக்கு புகார் போனது. பள்ளியில் நிறுத்தி இருந்த சைக்கிளை யாரோ மாணவர்தான் எடுத்திருக்க முடியும் என அவர் தீர்மானித்தார். யார் எடுத்திருந்தாலும் திருப்பி கொடுத்து விட்டால் தண்டனை கிடையாது என அறிவித்தார். பலன் இல்லை. போலீஸ் வந்து விசாரிக்கும் என்றார். அதற்கும் பலன் இல்லை. சைக்கிளை பறிகொடுத்த மாணவி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் வந்தது. சைக்கிள் பற்றி மாணவி கொடுத்த அடையாளங்களை வைத்து, சிசிடிவி கேமராக்களை பார்வையிட்டனர். வேறு வகுப்பில் படிக்கும் மாணவி, சைக்கிளை எடுத்து சென்றது தெரிந்தது. காட்சிகளை மேம்படுத்தி ஆய்வு செய்தபோது, சைக்கிளை எடுத்து சென்ற மாணவியின் அடையாளம் தெரிந்தது. பூட்டாமல் நிறுத்தி இருந்த சைக்கிளை எடுத்து சென்ற அந்த மாணவி, பள்ளிக்கு கொண்டு வராமல் ஒரு வாரமாக வெளியே ஓட்டி ரசித்திருக்கிறார். அவருக்கு சைக்கிள் என்றால் அவ்வளவு பிரியமாம். ஆனால், இலவச சைக்கிள் பெற 3 வருடம் காத்திருக்க வேண்டுமே. ஆசை கண்களை மறைத்தது. சும்மா நின்ற வண்டியை எடுத்து சென்றுவிட்டார். போலீசார் கைப்பற்றியபோதும், சைக்கிளை பிரிய மனமில்லாமல் கதறி அழுதார். ஆசை தீர ஓட்டிவிட்டு திருப்பி கொடுத்து விடலாம் என நினைத்ததாக சொன்னார். போலீஸ் இதயங்களும் உருகிவிட்டன. பிறர் பொருளை அனுமதி இன்றி தொடக்கூடாது என்று மென்மையாக எடுத்து கூறினர் போலீசார். இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஒருபடி மேலே சென்றார். சொந்த பணத்தில் புது சைக்கிள் வாங்கி, சைக்கிளை இழந்த மாணவி கையால் அதை ஏழை மாணவிக்கு பரிசளித்தார். ஆர்.எஸ்.புரம் போலீசாரின் மனித நேயம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை