உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடுப்பு முயற்சிகளால் விபத்தில் உயிரிழப்பு குறைகிறது! மேலும் 52 இடங்களில் தடுப்புகள் அமைப்பு

தடுப்பு முயற்சிகளால் விபத்தில் உயிரிழப்பு குறைகிறது! மேலும் 52 இடங்களில் தடுப்புகள் அமைப்பு

கோவை: கோவையில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த, விபத்து அதிகம் நிகழும் 52 முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீசார் 'பேரிகார்டு' அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். தடுப்பு நடவடிக்கைகளால் விபத்தில் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக, போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர். மாநகரில் அவிநாசி, திருச்சி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் ரோடு உள்ளிட்ட அகலமான சாலைகளில் வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் செல்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இளைஞர்கள் வேகமாக வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களாக விபத்துகள் தொடர்ந்து நடந்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, 52 இடங்களில் வாகன வேகத்தை குறைக்கும் வகையில் ஜிக்-ஜாக் தடுப்புகள், பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் மற்றும் எச்சரிக்கை பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக வேகமாக செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது. தடுப்புகள் அமைத்தது மற்றும் தீவிர கண்காணிப்பு காரணமாக விபத்துகள் சற்று குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து மரணம் 2025ல் நடந்த சாலை விபத்துகளில் 271 பேர் உயிரிழந்துள்ளனர். 2026ல் இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 93 உயிரிழப்புகள் பதிவான நிலையில், இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 83 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. உயிரிழப்பு ஏற்படாத விபத்துகள், 2025ல் 901 பதிவாகியுள்ளன. கடந்த ஜனவரி முதல் தற்போது வரை, 301 விபத்துக்கள் இப்பிரிவில் பதிவாகியுள்ளன. மாநகர போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'சாலை அகலமாக இருப்பதால் பலர் வேகத்தை அதிகரிக்கின்றனர். சில நிமிட வேக சாகசம் பல குடும்பங்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது. அபராதம் மட்டுமே தீர்வாகாது; வாகன ஓட்டிகளின் பொறுப்புணர்வும் அவசியம். குறிப்பாக இளைஞர்கள் இரவில் அதிவேக பயணத்தை தவிர்க்க வேண்டும். விபத்துக்களை குறைக்கும் வகையில், குறிப்பிட்ட இடங்களில் வேகத்தை கட்டுப்படுத்த 52 தடுப்பு அமைப்பு ஏற்படுத்தியுள்ளோம் ' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !