உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பையை நான்கு வகையாக தரம் பிரிப்பது கட்டாயமாகிறது!. பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

குப்பையை நான்கு வகையாக தரம் பிரிப்பது கட்டாயமாகிறது!. பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், அனைத்து மொத்த கழிவு உருவாக்குபவர்கள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில், மக்கும், மக்காத கழிவுகள் என தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்கி வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026ன் படி, மொத்த கழிவு உருவாக்குபவர் என வகைப்படுத்தப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மொத்தம், 20 ஆயிரம் சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட கட்டடம் அல்லது, நாள் ஒன்றுக்கு, 40 ஆயிரம் லிட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட நீர் நுகர்வு கொண்ட நிறுவனம்; நாள் ஒன்றுக்கு, 100 கிலோ கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திடக்கழிவை உருவாக்கும் நிறுவனம் அல்லது அமைப்பு என வரையறுக்கப்பட்டுள்ளது. நிறுவன அமைப்புகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு நலச்சங்கங்கள், ேஹாட்டல்கள் அல்லது விடுதிகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற பெரிய நிறுவனங்கள் அனைத்தும் மொத்த கழிவு உருவாக்குபவர் எனும் பிரிவின் கீழ் அடங்கும். அனைத்து மொத்த கழிவு உருவாக்குபவர்களும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://swm.cpcb.gov.in/register) வாயிலாக கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். அறிவிப்பு வெளியான, 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவை முடிக்க தவறும் மொத்த கழிவு உருவாக்குபவர்கள் மீது, தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறை பின்பற்ற தவறினால், கடுமையான அமலாக்க நடவடிக்கைகள், அபராதங்கள் விதிக்கப்படும். மொத்த கழிவு உருவாக்குவோர், தங்களது சொந்த செலவில், நான்கு வண்ண குறியீடுகள் கொண்ட குப்பை தொட்டிகளை வாங்க வேண்டும். கழிவுகளை உருவாகும் இடத்திலேயே, ஈரக்கழிவு, உலர் கழிவு, சுகாதார கழிவு, சிறப்பு கவனிப்பு கழிவு என தனித்தனியாக பிரிப்பதை உறுதி செய்ய வேண்டும். நகராட்சி வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும். நான்கு டப்பாக்கள்! அனைத்து குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், அமைப்புகள், ஈரக்கழிவு அல்லது மக்கும் கழிவு, பச்சை நிற டப்பா, உலர் அல்லது மக்காத கழிவுக்கு நீல நிற டப்பா, சுகாதார கழிவுக்கு சிவப்பு நிறம், சிறப்பு கவனிப்பு அல்லது வீட்டு அபாயகர கழிவுக்கு கருப்பு நிற டப்பாக்களில், தரம் பிரித்து வழங்க வேண்டும். சிறப்பு கவனிப்பு அல்லது வீட்டு அபாயகர கழிவு ஒவ்வொரு புதன் கிழமையில் மட்டும் பெறப்படும். பொதுமக்கள் இதுபோன்ற கழிவுகளை பிரித்து, கழிவு சேகரிக்கும் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வகை பிரிக்கப்படாத கலவை கழிவுகள் எக்காரணம் கொண்டும் சேகரிப்புக்கு ஏற்கப்படாது. இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு, கூறினர். 4 வகை கழிவுகள் எவை? ஈர அல்லது மக்கும் கழிவுகள்: சமையலறை கழிவுகள், சமைத்த, சமைக்காத உணவு கழிவுகள், காய்கறி, பழ, இறைச்சி, பூக்கள், தேயிலைத்துாள், காபித்துாள், முட்டை ஓடுகள், எளிதல் மக்கும் கழிவாகும். உலர் அல்லது மக்காத கழிவு: காகிதங்கள், அட்டைகள், செய்தித்தாள்கள், புத்தகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், உலோகங்கள், கண்ணாடிகள், அட்டைப்பெட்டிகள், துணி வகைகள், போக்கேஜ் செய்யும் பொருட்கள், மறு சுழற்சி செய்ய முடியாத கழிவுகள். சுகாதார கழிவுகள்: பயன்படுத்தப்பட்ட டயப்பர்கள், சானிட்டரி நாப்கின்கள், நாப்கின்கள், ஆணுறைகள், சிறுநீர் கசிவு தாள்கள் மற்றும் இதுபோன்ற பிற சுகாதார கழிவுகள். சிறப்பு கவனிப்பு அல்லது வீட்டு அபாயகர கழிவு: கைவிடப்பட்ட வண்ணப்பூச்சு டப்பாக்கள் அல்லது பீப்பாய்கள், பூச்சிக்கொல்லி டப்பாக்கள், கொள்கலன்கள், சி.எப்.எல்., பல்ப், உள்ளிட்ட மின்னனு கழிவுகள், கழிவு ஊசிகள், சிரிஞ்சுகள், அசுத்தமான அளவீட்டு கருவிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அவ்வப்போது அறிவிக்கப்படும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் கீழ் வகைப்படுத்தப்பட்ட பிற வீட்டு அபாயகர கழிவுகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை