அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர் சுபத்ரா,65. இவர், நேற்று கைவலி காரணமாக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை புதிய கட்டடத்துக்கு வந்து, புறநோயாளிகள் சீட்டு பெற்று டாக்டரை சந்திக்க சென்றார்.அப்போது, அங்கு வந்த மர்மநபர், மருத்துவமனையில் இலவசமாக தங்க கம்மல் கொடுப்பதாகவும், நகை போட்டு இருந்தால் கொடுக்க மாட்டாங்க, என, மூதாட்டியிடம் கூறியுள்ளார்.அதை நம்பிய மூதாட்டி, நகையை கழற்றிய போது, பார்த்து விட்டு தருவதாக கூறி வாங்கியுள்ளார். அதன்பின், அங்கிருந்து தப்பியோடினார். மூன்று பவுன் நகையை பறிகொடுத்த மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில், கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் ரோட்டிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை, போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.