வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்
- நமது நிருபர் -மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை, இணையதளம் வாயிலாக, விண்ணப்பதாரர்கள் தாங்களாகவோ அல்லது அலுவலகத்தில் உள்ள வழிகாட்டி மையத்துக்கோ வந்து விண்ணப்பிக்கலாம். புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞர் கைவினை திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் ஆகியவை, மாவட்ட தொழில் மையங்கள் வாயிலாக செயல்படுத்தப்படுகின்றன. தற்போது, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டத்தை தவிர, மற்ற நான்கு திட்டங்களுக்கு, www.msmeonline.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாகவே விண்ணப்பிக்கலாம். இதற்கு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், மொபைல்போன் இணைக்கப்பட்ட ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, தொழில் திட்ட அறிக்கை ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். கலைஞர் கைவினை திட்டத்தில் மாற்று சான்றிதழ் கேட்கப்படுவதில்லை. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாதவர்கள், கோவை டவுன் ஹாலில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள, வழிகாட்டி மையத்தை அணுகலாம் என, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகசிவா தெரிவித்துள்ளார்.