காரமடை தெப்பக்குளம் நிரம்பியது
மேட்டுப்பாளையம்; சமீபத்தில் பெய்த மழை காரணமாக, காரமடை அரங்கநாதசுவாமி கோவில் தெப்பக்குளம் பல ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியுள்ளது.இதுகுறித்து கோவில் ஊழியர்கள் கூறியதாவது: இந்த தெப்பக்குளத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கருடாழ்வார் உருவாக்கினார். பின், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் திருமலை நாயக்க மன்னரால் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டது. இந்த தெப்பக்குளத்தை கருடாழ்வார் தீர்த்தம் என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். முடி காணிக்கை செலுத்திவிட்டு பக்தர்கள் இந்த குளத்தில் நீராடுவார்கள். மேலும், இந்த குளத்தில் நீராடினால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். புகழ் பெற்ற காரமடை தேர் திருவிழாவின் போது, நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தாசர்கள் தெப்பக்குளத்திலிருந்து, தோல் பைகளில் தண்ணீர் எடுத்துச் சென்று அரங்கநாத பெருமாளுக்கு தண்ணீர் சேவையாற்றுவார்கள்.தேர் திருவிழாவின் இறுதி நாளில், தெப்பத் திருவிழா தீர்த்தவாரி என்கிற உற்சவம் நடைபெறும். தற்போது கடந்த சில நாட்களாக காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையால், இந்த தெப்பக்குளத்தில் உள்ள நீரூற்று பெருக்கெடுத்து, பல ஆண்டுகளுக்கு பின் முழுமையாக நிரம்பியுள்ளது. தெப்பக்குளம் நிரம்பி உள்ளதால், பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.