துணை சுகாதார நிலையம் அமைக்கணும்! கவர்க்கல் தொழிலாளர்கள் வலியுறுத்தல்
வால்பாறை; வால்பாறையில், கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, கடந்த, 20 ஆண்டுகளாக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.வால்பாறையில் இருந்து, 14 கி.மீ., தொலைவில் கவர்க்கல் எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கிருந்து, 10 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது, சக்தி - தலநார் எஸ்டேட். இதை சுற்றிலும், 10க்கும் மேற்பட்ட சிறிய தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. இங்குள்ள கவர்க்கல், சக்தி - தலநார் எஸ்டேட்களில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இப்பகுதியில், அரசு துணை ஆரம்ப சுகாதார நிலைய வசதி கூட இல்லாததால், இங்கு வசிக்கும் தொழிலாளர்கள், 24 கி.,மீ.,தொலைவில் உள்ள வால்பாறை செல்ல வேண்டியுள்ளது.சாதாரண காய்ச்சல், சளி என்றால் கூட வால்பாறை நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால், இப்பகுதி தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கவர்க்கல் எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கவர்க்கல் எஸ்டேட் பகுதியை சுற்றிலும், சக்தி-தலநார், பிளண்டிவேலி, மகாவீர், லில்லி, மகாலட்சுமி உட்பட, பல்வேறு எஸ்டேட்கள் உள்ளன.இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக, போதிய பஸ் வசதி கூட இல்லாத நிலையில், கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இப்பகுதியில் போதிய மருத்துவ வசதியும் இல்லை. காய்ச்சல், தலைவலி என்றால் கூட மாத்திரை வாங்க முடியாத பரிதாப நிலையில் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். தொழிலாளர்களின் நலன் கருதி, வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.