ஓட்டுப்பதிவின் போது இதையெல்லாம் கவனியுங்க!
பொள்ளாச்சி: 'வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு அளிக்கும் போது கவனித்து, ஓட்டு அளிக்க வேண்டும்,' என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில், உங்கள் பெயரை சரிபார்க்க வேண்டும். ஓட்டுச்சாவடியில் வரிசையில் நிற்பதுடன், வாக்காளர் அட்டை கையில் வைத்திருக்க வேண்டும். முதல் தேர்தல் அலுவலர் வாக்காளர் பட்டியலையும், உங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையும் சரிபார்ப்பார். தேர்தல் அலுவலர் விரலில் அடையாள மை வைத்து தரும், சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின் உங்கள் கையெழுத்தை பெறுவார். தேர்தல் அலுவலர் உங்களிடம் உள்ள சீட்டை திரும்ப பெறுவார். உங்கள் விரலில் மை உள்ளதா என சரிபார்ப்பார். ஓட்டு அளிக்கும் பகுதிக்குள் நுழையும் போது, தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுப்பதிவு கருவிகளை பதிவுக்கு தயார் நிலையில் வைப்பார். ஓட்டுப்பதிவு கருவியில் உள்ள உங்கள் விருப்ப வேட்பாளரின் பெயர், சின்னத்துக்கு எதிரே உள்ள நீல நிற பட்டனை அழுத்த வேண்டும். அப்போது சிவப்பு நிற லைட் ஒளிரும். ஓட்டளித்த வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம், வரிசை எண் உள்ளடக்கிய ஓட்டுப்பதிவை அருகில் உள்ள 'விவிபேட்' இயந்திரத்தில் ஏழு நொடிகள் வரை பார்க்க இயலும். அதன்பின் அந்த சீட்டு துண்டிக்கப்பட்டு கீழ் பகுதியில் உள்ள பெட்டியில் விழுந்துவிடும். ஓட்டுப்பதிவு ரசீதினை திரையில் பார்க்கவில்லை என்றாலோ, 'பீப்' ஒலி கேட்வில்லை என்றாலோ தலைமை ஓட்டுச்சாவடி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.