உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவாணியில் இருந்து தண்ணீரை திறந்து விட்டது கேரளா! கோவை மாநகராட்சி, குடிநீர் வாரியத்தினர்   அதிர்ச்சி

சிறுவாணியில் இருந்து தண்ணீரை திறந்து விட்டது கேரளா! கோவை மாநகராட்சி, குடிநீர் வாரியத்தினர்   அதிர்ச்சி

கோவை; கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் மொத்த உயரம், 50 அடி; பாதுகாப்பு காரணங்களை கூறி, 44.61 அடிக்கே தண்ணீர் தேக்க முடியும் என கேரள நீர்ப்பாசனத்துறை கூறுகிறது. நேற்றைய தினம் நீர் மட்டம், 43 அடியாக இருந்தபோதே, மதகை திறந்து, தண்ணீரை வெளியேற்றியதால், மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில், அட்டப்பாடி பள்ளத்தாக்கில் சிறுவாணி ஆறு உற்பத்தியாகி, பவானி ஆற்றில் கலக்கிறது. இது, காவிரி மற்றும் பவானி ஆற்றின் துணை நதியாகும். மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பெய்யும் மழை நீர், சிறுவாணி அணையில் தேக்கப்படுகிறது. கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, தினமும், 10.1 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கும் வகையில், இரு மாநில அரசுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன.

கோவைக்கு பராமரிப்பு செலவு

கோவை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதால், அணையை பராமரிப்பதற்கான செலவை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுள்ளது; பராமரிக்கும் பொறுப்பை கேரள நீர்ப்பாசனத்துறை ஏற்றிருக்கிறது.இந்த அணை, கடல் மட்டத்தில் இருந்து, 863.50 மீட்டர் உயரத்தில் இருக்கிறது; அதிகபட்ச உயரம் - 878.50 மீட்டர். 22.47 சதுர கி.மீ., பரப்பு கொண்டது; 650 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கலாம். இதன்படி, 15 மீட்டர் (நீர் மட்டம் - 50 அடி) உயரம் கொண்டது. 1.55 கி.மீ., துாரத்துக்கு மலையை குடைந்து, எவ்வித உந்து சக்தியும் இல்லாமல், புவியீர்ப்பு விசையில் அடிவாரத்துக்கு தண்ணீர் தருவிக்கப்படுவது, இதன் சிறப்பம்சம்.

பாதுகாப்பு காரணங்கள்

அணையின் மொத்த உயரம், 50 அடியாக இருந்த போதிலும், பாதுகாப்பு காரணங்களை கூறி, ஐந்தடிக்கு குறைவாக நீர் தேக்க, அம்மாநில நீர்ப்பாசனத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, 45 அடிக்கு தேக்கப்பட்டு வந்தது. சமீபகாலமாக, 44.61 அடிக்கே நீர் தேக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தற்போது அணை பகுதியில், கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 147 மி.மீ., பதிவானது; ஒரே நாளில் 2 அடி உயர்ந்து, 43.13 அடியாக நீர் மட்டம் அதிகரித்தது; 9.97 கோடி லிட்டர் தண்ணீர் தருவிக்கப்பட்டது. ஒப்பந்தப்படி, 10.1 கோடி லிட்டர் தண்ணீர் பெறும் வகையில், வால்வுகளை திறக்க, கேரள அரசிடம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் கோரியிருந்தனர்.ஆனால், கிளை ஆறுகளில் நீர் வரத்து அதிகரிப்பு மற்றும் மழைப்பொழிவை காரணம் காட்டி, விலங்குகள் தாகம் தீர்க்க தண்ணீர் திறந்து விடும் துளையில் உள்ள மதகை, 50 செ.மீ., உயரத்துக்கு (வழக்கமாக, 5 செ.மீ., மட்டுமே திறந்திருக்கும்) நேற்று, தண்ணீரை வெளியேற்றினர். இது, கோவை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கேரள நீர்ப்பாசனத்துறையினரிடம், தமிழக அதிகாரிகள் பேசி, திறக்கப்பட்ட மதகை மூட வைத்துள்ளனர்.

'மதகு அடைக்கப்பட்டு விட்டது'

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''சிறுவாணி அணை நீர் மட்டம், 44 அடியாக உயர்ந்ததால், மதகை திறந்து தண்ணீரை வெளியேற்றியதாக தெரிவித்தனர். தற்போது, 43 அடிக்கு நீர் இருப்பு இருக்கிறது. வழக்கமாக, 5 செ.மீ., உயரத்துக்கு மதகு திறந்திருக்கும்; கூடுதலாக, 5 செ.மீ., திறந்ததாக கூறினர். திறக்கப்பட்ட மதகு அடைக்கப்பட்டு விட்டது. மதகை முழுமையாக திறந்தால், உத்தேசமாக, நாளொன்றுக்கு, 5 கோடி லிட்டர் வெளியேறும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ