கிக்கானி பள்ளிக்கு 206 பதக்கங்கள் அ-குறுமைய போட்டியில் அசத்தல்
கோவை, ; பள்ளி கல்வி துறை சார்பில் கோவை மாவட்ட அ-குறுமைய விளையாட்டு போட்டிகள் பாரதியார் பல்கலையில் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முதல் இரு நாட்கள் மாணவியருக்கும், அடுத்த மூன்று நாட்கள் மாணவர்களுக்கும் போட்டிகள் நடந்தப்பட்டன. மாணவியருக்கான கால்பந்து போட்டியில், கிக்கானி பள்ளி அணிகளானது, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் வெற்றி பெற்றது. மாணவியருக்கான, 14, 17 வயதுக்குட்பட்டோர் ஹாக்கி போட்டியிலும், 14 வயதுக்குட்பட்டோருக்கான கைப்பந்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர். 14, 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து, ஹாக்கி போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கான (19 வயதுக்குட்பட்ட) த்ரோபால் போட்டியிலும் முதல் பரிசை தட்டியுள்ளனர். அனைத்து போட்டிகளிலும் சேர்த்து, 206 பதக்கங்களை மாணவ, மாணவியர் வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை தலைமை ஆசிரியை ஆனந்தி, உடற்கல்வி ஆசிரியர் ஜேம்ஸ் கென்னடி உள்ளிட்டோர் பாராட்டினர்.