பக்கவாத அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்: நரம்பியல் டாக்டர்கள் அறிவுரை
கோவை : கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள, நட்சத்திர ஓட்டலில் மூளை பக்கவாத தினத்தையொட்டி, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தலைமை நரம்பியல் நிபுணர் டாக்டர் அசோகன், கே.எம்.சி.எச்., டாக்டர் பிரகாஷ் உட்பட, பல டாக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதன் பின், டாக்டர் அசோகன் நிருபர்களிடம் கூறியதாவது:மூளை பக்கவாதம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, வரும் 29ம் தேதி பக்கவாத தினம் அனுசரிக்கப்படுகிறது. அறிகுறிகளுடன் வருபவரை டாக்டர்கள் பரிசோதித்து, அது மூளை பக்கவாதமாக இருந்தால் மூளை நரம்பில் மருந்தை செலுத்தி, அடைப்பை நீக்கி குணப் படுத்தி விடலாம்.மூளை பக்கவாதம் வர காரணம் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், அதிக உடல் எடை, புகைப்பிடித்தல், மன அழுத்தம், துாக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாதது ஆகியவை.40 வயதை கடக்கும் போது, மருத்துவ பரிசோதனை மிக முக்கியம். பெரியவர்களுக்கு மட்டும் அல்ல, குழந்தைகளுக்கு தலையில் அடிபடுதல் போன்ற காரணத்தாலும், மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. தகுந்த சிகிச்சை எடுக்கவில்லை என்றால், வாழ்நாள் முழுவதும் முடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மாரடைப்பிற்கு உள்ள விழிப்புணர்வு, மூளை பக்கவாதத்திற்கு இல்லாதது வேதனைக்குரியது.இவ்வாறு, அவர் கூறினார்.
பக்கவாதத்தின் அறிகுறிகள்
''மூளை பக்கவாதத்தை பொருத்தவரை, 'பி பாஸ்ட்' என கூறப்படுகிறது. பி என்றால் (பேலன்ஸ்) தடுமாற்றம், இ என்றால் (ஐ) கண் பார்வை குறைபாடு, எப் என்றால் (பேஸ்) முகம், வாய் கோணுதல், ஏ என்றால் (ஆர்ம்) கை, கால் ஓய்ந்து விடுதல் எஸ் என்றால் (ஸ்பீச்) பேச்சு தடுமாற்றம், டி என்றால் (டைம்). இந்த அறிகுறிகளை உணர்ந்து, தகுந்த நேரத்தில் சிகிச்சை பெற்றால், மூளை பக்கவாதத்தில் இருந்து விடுபடலாம். அறிகுறிகள் தென்பட்ட, நாலரை மணி நேரத்திற்குள் டாக்டரை அணுக வேண்டும்,'' என்றார் டாக்டர் அசோகன்.