உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரம்பரியம் தொடரவும், கலாசாரம் பின்பற்றவும் உதவுகிறது கொலு; கோவைப்புதுார், குனியமுத்துாரில் வாசகியர் பக்திமயம்

பாரம்பரியம் தொடரவும், கலாசாரம் பின்பற்றவும் உதவுகிறது கொலு; கோவைப்புதுார், குனியமுத்துாரில் வாசகியர் பக்திமயம்

போத்தனூர்; நவராத்திரி விழாவையொட்டி, தினமலர் நாளிதழ் சார்பில் கொலு விசிட் குனியமுத்தூர், கோவைபுதூர் பகுதிகளில் நேற்று நடந்தது. நவராத்திரி கொலு வைத்துள்ள வாசகர்களின் வீடுகளுக்கு, அவர்களது அழைப்பினையொட்டி, தினமலர் குழுவினர் விசிட் செய்தனர். கொலுவின் சிறப்பு குறித்து நம் வாசகியர் விளக்கினர். சித்ரா, பழனியப்ப கோனார் வீதி, பி.கே.புதூர்: பாரம்பரியமாக இத்தகைய விழாக்களை தொடர வேண்டும். தற்போதைய தலைமுறையினருக்கு கலாசாரத்தை கற்றுத்தரவும், கடவுள்கள் குறித்து அறியவும் இவை பெரிதும் உதவுகின்றன. அன்றைய தலைமுறை பயன்படுத்திய பொருட்களை, நாமும் பயன்படுத்துவது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. சிவகலை, முத்துசாமி சேர்வை வீதி, பி.கே.புதூர்: ஏழு நிலைகளையும் நாம் உணரும் வகையில், ராமாயணம், சிவதரிசனம், முருகனின் அறுபடை வீடுகள், ஐவகை நிலங்கள் என இதிகாசங்கள் அடிப்படையில் கொலு அமைத்துள்ளேன். வாழ்வு சிறக்க கடவுள் வழிபாடு அவசியம். நாகம்மை, சாரதா நகர், பி.கே.புதூர்: கடந்த சில ஆண்டுகளாக, கொலு வைப்பதை நிறுத்தியிருந்தேன். இவ்வாண்டு அம்மன் கலசத்தை கொண்டு வந்து வீட்டில் வைப்பது போல் கனவு வந்தது. உடல் ரீதியாக அசவுகரியம் ஏற்பட்டது. இதையடுத்து கொலு வைத்தேன். மன அமைதி ஏற்பட்டது . ராஜசேகர், அபிராமி நகர், குனியமுத்தூர்: முப்பெரும் தேவியரை வழிபடுவதால், வாழ்வில் சுபிட்சம் கிடைக்கும். நமது குடும்பத்தை வழிநடத்தி, நல்வழி காண்பிப்பர். பாரம்பரியம் தொடரவும், கலாசாரத்தை பின்பற்றவும் இத்தகைய விழாக்களை தொடர வேண்டும். பவானி, குறிச்சி ஹவுசிங் யூனிட்: கொலு வைப்பது பாரம்பரியம், கடவுள்கள் குறித்து அறிய உதவும். கிருஷ்ணர், ராமர் அவதாரங்கள், திருமண நிகழ்வு, தற்கால படைப்புகளை காட்சிப்படுத்துவது மனதுக்கு மகிழ்வையும், நிறைவையும் தரும். ஸ்ரீ நிதி, காவேரி நகர், குனியமுத்தூர்: அனைவரும் ஒன்றே. உலகம் முழுமையும் ஒரு குடும்பம் என்பதை உணர வேண்டும். பழைய கால பொருட்களை பயன்படுத்துவதில் கிடைக்கும் மகிழ்ச்சி மிக அதிகம். தெய்வங்களை வழிபடுவது மிக முக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ