கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்: கொடிசியா கோரிக்கை
கோவை; கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என, கொடிசியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறியுள்ளதாவது:மாநில பட்ஜெட்டுக்கு முந்தைய விவாதத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கொடிசியா சார்பில் பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது இயக்கச் செலவுகளை குறைக்க ஏதுவாக கட்டட மேற்கூரைகளில் சோலார் மின்கலன்களை நிறுவ, 25 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். பெரும்பாலான தொழிற்சாலைகள் பகலில் இயங்குவதால், இத்திட்டம், 60 சதவீதம் தொழில்களுக்கு பயன் அளிக்கும். சிறு மற்றும் குறு தொழில்களுக்கு வங்கிக்கடன்களை பெறுவதற்கான எம்.ஓ.டி.,கட்டணங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும். கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டம் விரைவுப்படுத்தப்பட வேண்டும்.கோவை நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும். உள்கட்டமைப்புப் பணிகள் ஒன்றை, ஒன்று பாதிப்பதை தவிர்க்க கோவையில் ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் செயல்படுத்தப்பட வேண்டும். சென்னை, திருச்சியை போல், கோவையில் ஒருங்கிணைந்த பஸ் முனையம் ஏற்படுத்தப்பட வேண்டும். உள்ளூர் நிறுவனங்கள் பங்களிப்புடன் குளங்கள், கண்மாய்கள், நீர்நிலைப்பகுதிகளை புதுப்பிக்கும் பணிகள் நடத்த வேண்டும். கோவையின் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையை துார்வார வேண்டியது அவசியமானது. அணை துார்வார நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.