கூடுதுறையில் நொய்யல் வனம் சிறுதுளி அமைப்பு திட்டம்
தொண்டாமுத்துார்: தொம்பிலிபாளையம், நொய்யல் ஆறு கூடுதுறையில், ஆற்றை துார்வாரி, கரையில் நொய்யல் வனம் அமைக்க சிறுதுளி அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் சிற்றோடைகள் இணைந்து, தொம்பிலிபாளையம், கூடுதுறையில், நொய்யல் ஆறு உருவாகி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக பாய்ந்து, கரூரில் கடலில் கலக்கிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையால், நொய்யல் ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதில், நொய்யல் ஆறு உருவாகுமிடமான கூடுதுறையில், ஆற்றின் கரைகள் அரிக்கப்பட்டது. இதனால், ஆற்றின், உண்மையான வழித்தடம் மாறியது. இதை, சிறுதுளி அமைப்பு, சீரமைத்து, ஆற்றின் கரைகளை பலப்படுத்த வனம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சிறுதுளி அமைப்பினர் கூறுகையில், ''தொம்பிலிபாளையம், கூடுதுறையில், நொய்யல் ஆற்றில், பல ஆண்டுகளாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அதன் உண்மையான வழித்தடம் மாறியுள்ளது. இதில், ஆற்றின் ஓரத்தில் உள்ள சில விவசாய நிலங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு, ஆற்றின் பாதை திசை மாறியுள்ளது. அப்பகுதி விவசாயிகளின் வேண்டுகோளின்படி, பொதுப்பணித்துறையின் அனுமதி பெற்று, ஆற்றின் உண்மையான பாதையை, துார்வாரி, ஆற்றின் கரைகளை பலப்படுத்தியுள்ளோம். எதிர்காலத்திலும், ஆற்றின் கரையில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்க, ஆற்றின் கரையில், 2,000 மரக்கன்றுகள் நடவு செய்து, 'நொய்யல் வனம்' உருவாக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில், பணிகள் முடிக்கப்பட்டு, நொய்யல் வனம் உருவாக்கப்படும்,'' என்றனர்.