உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டு யானைகளை விரட்டும் பணியில் கும்கிகள் களம்

காட்டு யானைகளை விரட்டும் பணியில் கும்கிகள் களம்

பந்தலுார், : பந்தலுார் அருகே, சேரம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டுள்ள, காட்டு யானைகளை விரட்டும் பணியில் கும்கி யானைகள், 3-வது நாளாக ஈடுபட்டு உள்ளன. பந்தலுார் அருகே சேரம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், கட்டைக் கொம்பன் மற்றும் 'புல்லட்' ஆகிய இரண்டு யானைகள் ஒன்றாக உலா வருகின்றன. பகல் நேரங்களில் குடியிருப்புகளை ஒட்டிய புதர் பகுதியில், முகாமிடும் இந்த இரண்டு யானைகளும் மாலையில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு, சேரம்பாடி பகுதியில், குடியிருப்புகள் அருகே வந்த இரண்டு யானைகள், குஞ்சுமுகமது என்பவரை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.தொடர்ந்து, 'இந்த இரண்டு யானைகளையும், கும்கி யானைகள் உதவியுடன் அடர் வனத்திற்குள் விரட்ட வேண்டும்,' என, வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். யானைகளை விரட்ட, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து, கும்கி யானைகள் விஜய் மற்றும் வசீம் ஆகிய யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம், கோரஞ்சால் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டிய நிலையில், நேற்று சின்கோனா மற்றும் ஆணைபள்ளம் பகுதிகளில் முகாமிட்டிருந்த யானைகளை கும்கி யானைகள் மற்றும் வனக்குழுவினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால், உள்ளூர் மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். இப்பகுதியில் மேலும் பல யானைகள் உள்ளதால், கூடுதலாக கும்கிகளை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி