படிவம் பற்றாக்குறை; குடிநீரும் இல்லை அரசு முகாமில் மக்கள் அவதி
குடிமங்கலம்: மரிக்கந்தையில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படாததால், கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். தமிழக அரசு, கிராமங்களில், பல்வேறு அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாமில், மகளிர் உரிமைத்தொகை, இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களுக்காக, கிராம மக்கள் அதிக கோரிக்கை மனுக்களை வழங்குகின்றனர். ஆங்காங்கே திட்டம் குறித்து 'பிளக்ஸ் பேனர்' வைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் முகாமில் அடிப்படை வசதிகள் குறித்து கண்டுகொள்வதில்லை. குடிமங்கலம் ஒன்றியத்தில், முதற்கட்டமாக, பஸ் வசதி இல்லாத அடிவள்ளி கிராமத்தில் முகாம் நடத்தியதால், அருகிலுள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். நேற்று, விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மரிக்கந்தை கிராமத்தில் முகாம் நடந்தது. இந்த ஊராட்சிக்குட்பட்ட, விருகல்பட்டி, பழையூர், புதுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மரிக்கந்தை வர பஸ் வசதி இல்லை. சிரமப்பட்டு நடந்து வந்த மக்களுக்கு, முகாமில் குடிநீர் வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால், பெண்கள், முதியவர்கள் அதிகம் பாதித்தனர். அதே போல், முகாமில் வழங்க வரிசை எண்ணுடன் கூடிய படிவம் வழங்கப்படும். இந்த படிவம் நேற்றைய முகாமில், பெரும்பாலான மக்களுக்கு கிடைக்கவில்லை. மனு கொடுக்க காத்திருந்த மக்கள் வேறு வழியில்லாமல், படிவத்தை ஜெராக்ஸ் எடுத்து, முகாமில் சமர்ப்பித்தனர். ஒரே வரிசை எண் உடைய படிவங்களை மக்கள் வழங்கியதால், அம்மனுக்கள் மீதான நடவடிக்கை கேள்விக்குறியாகியுள்ளது. இப்பிரச்னை குறித்து, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கேட்டபோது, எவ்வித பதிலும் அளிக்காமல் அதிகாரிகள் சமாளித்தனர். இதனால், மக்கள் அதிருப்தியுடன் திரும்பினர்.