வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கரெக்ட். ரெண்டு பக்கமும் வளர்ந்திருக்கிற மரங்கள் கண்ணை உறுத்துமே.. வெட்டி சாய்ச்சு ரோடு போடுங்க. வெளங்கிடும். பா.ம.க வுக்கு சொல்லுங்க. வேலை கச்சிதமா முடிஞ்சிரும்.
கோவை; தொடர்ந்து விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டை விரிவாக்கம் செய்வது அவசியம் மட்டுமின்றி, அவசர தேவையாகி உள்ளது. சேலத்தில் இருந்து கோவை வழியாக, கேரளா செல்லும் கொச்சின் சாலை, நீலாம்பூர் அருகே கடக்கிறது. நீலாம்பூரில் இருந்து பாலக்காடு ரோட்டில் மதுக்கரை வரை, 28 கி.மீ., துாரத்துக்கு நீண்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள், கோவை நகர நெரிசலில் சிக்காமல் சேலம், திருச்சி நோக்கிச் செல்லவும், எதிர் திசையில் வரும் வாகனங்கள், கேரளா செல்லவும், இச்சாலை பேருதவியாக உள்ளது. இச்சாலை, கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசாரின் கட்டுப்பாட்டில் வருகிறது. கோவை மாநகர போலீசாரின் கட்டுப்பாட்டில், சிந்தாமணிபுதுார் சுங்கச்சாவடி முதல், ஏ.ஜி.புதுார் சந்திப்பு வரை, நான்கு கி.மீ., துாரமும், ஆறுமுகம் பெட்ரோல் பங்க் முதல், ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானம் வரை, 3.7 கி.மீ., துாரம் என, மொத்தம், 7.71 கி.மீ., துாரம் அடங்கும். மீதமுள்ள, 22.29 கி.மீ., துாரம், மாவட்ட போலீசாரின் கட்டுப்பாட்டில் வருகிறது. இதில், சூலுார், செட்டிபாளையம், மதுக்கரை, கே.ஜி.சாவடி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் அடங்கும். சமீபகாலமாக, இந்த ரோட்டில் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2024, ஜூலை 1 முதல், 2025 ஜூன், 30ம் தேதி வரை மாநகர எல்லைக்கு ட்பட்ட, 7.71 கி.மீ.,ல், நடந்த நான்கு விபத்துக்களில், 32 பேர் காயம் அடைந்துள்ளனர். மாவட்ட போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், 122 விபத்துகளில், 33 பேர் உயிரி ழந்துள்ளனர். 143 பேர் காயமடைந்துள்ளனர். மொத்தம் , 37 பேர் உயிரிழந்துள்ளனர்; 175 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துகளை தடுக்க, போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், குறுகிய சாலை மற்றும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், விபத்துகளை தடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை. இதை கருத்தில் கொண்டு, சாலையை விரைவில் விரிவாக்கம் செய்ய வேண்டும். நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரோடு விரிவாக்கப்பணிகளுக்கான ஆயத்தப்பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. தற்போது இந்த ரோட்டை ஆறு வழிச்சாலையாக மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும்' என்றார்.
மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், ''சிறிய ரோடு என்பதால், அங்கு சாலை தடுப்புகள் வைக்க முடியாது. அதனால், தற்போது சாலையின் நடுவே, 'பொல்லார்டுகள்' வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக விபத்துகள் குறையும்,'' என்றார்.
கரெக்ட். ரெண்டு பக்கமும் வளர்ந்திருக்கிற மரங்கள் கண்ணை உறுத்துமே.. வெட்டி சாய்ச்சு ரோடு போடுங்க. வெளங்கிடும். பா.ம.க வுக்கு சொல்லுங்க. வேலை கச்சிதமா முடிஞ்சிரும்.