கிழக்கு புறவழி சாலைக்கு நிலம் கையகப்படுத்த திட்டம்
அன்னுார்; 'கோவை கிழக்கு புறவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த கோரப்பட்டுள்ளது,' என, திட்ட இயக்குனர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளித்துள்ளார். கருமத்தம்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் சதீஷ்குமார், கோவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகள் கேட்டிருந்தார். இதில், கோவை கிழக்கு புறவழிச் சாலையின் தற்போதைய நிலை, விரிவான திட்ட அறிக்கை, தேசிய நெடுஞ்சாலை எண் 544ஐ எங்கு இந்த சாலை தாண்டி செல்கிறது. கிழக்கு புறவழிச் சாலையின் அகலம் எவ்வளவு மீட்டர் உள்ளிட்ட கேள்விகள் கேட்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கோவை திட்ட இயக்குனர் செந்தில்குமார் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், 'இது கரூர் கோவை பசுமைவழிச் சாலையின் ஒரு பகுதி ஆகும். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் திட்டம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதிக்காக தற்போது காத்திருக்கிறோம்,' என பதில் அளித் துள்ளார். இதுகுறித்து அன்னுார் விவசாயிகள் கூறுகையில், 'மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார் ஆகிய மூன்று தாலுகாக்களில் பல இடங்களில் மார்க்கிங் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளோம் என திட்ட இயக்குனர் பதில் அளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் 1,200 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும்,' என்றனர்.