ஆனைமலை தாலுகாவில் கோர்ட் கட்டுவதற்கு நிலம் ஒப்படைப்பு! விரைவில் செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்ப்பு
பொள்ளாச்சி: ஆனைமலை தாலுகாவில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட் அமைக்க நிலம் ஒப்படைப்பு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கோர்ட்டுக்கு கட்டடம் கட்டும் வரை, தற்காலிக கட்டடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சியில், குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் செயல்படுகிறது. அனைத்து நீதிமன்றங்களும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில், கோவை ரோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில், ஆனைமலை கடந்த, 2018ம் ஆண்டு தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனைமலை தாலுகாவில், கோர்ட் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கை நிறைவேற்றப்படாத சூழலில், கோர்ட் வழக்குகளுக்காக ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு பகுதி மக்கள் பொள்ளாச்சிக்கு வந்து செல்கின்றனர். இதனால், கால விரயம் ஏற்படுகிறது. மேலும், வழக்குகள் அதிகளவு உள்ளதால், விசாரணை நடைபெற்று தீர்ப்பு கிடைக்கவும் அதிக கால அவகாசம் தேவைப்படும் சூழல் நிலவுகிறது. இதையடுத்து கடந்த, 2023ம் ஆண்டு ஆனைமலை மையப்பகுதியில், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் விசாரிப்பதற்கு ஏதுவாக, மாவட்ட உரிமையியல் கோர்ட் மற்றும் குற்றவியல் கோர்ட் என, ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கோர்ட் கட்டடம் அமைக்க, இடம் தேர்வு செய்ய, கோவை மாவட்ட நீதிபதி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் எந்த இடம் கோர்ட் அமைக்க ஏதுவாக இருக்கும் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனைமலை வனச்சரக அலுவலகம் அருகே, 4 ஏக்கர் பரப்பில், புதிதாக கோர்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த இடத்தை வருவாய்துறையினர், கோர்ட் கட்ட ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. தாசில்தார் திரிபுரசுந்தரி, கோவை மாவட்ட நீதிபதி விஜயாவிடம் மண் எடுத்து கொடுத்து, நிலத்தை ஒப்படைத்தார். மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி சிவக்குமார், சார்பு நீதிபதி மணிகண்டன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுஜாதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஸ்ரீநாத், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் சரவணகுமார், பிரகாசம், அரசு வக்கீல் தேவசேனாதிபதி முன்னிலை வகித்தனர். வக்கீல் சங்க தலைவர் துரை, செயலாளர் உதயகுமார், துணை தலைவர் பிரபு, பொருளாளர் சேவியர் ஆரோக்கிய செல்வராஜ், இணை செயலாளர் அருள்பிரகாஷ், வக்கீல்கள் மனோகர், மீரான் மொய்தீன்மற்றும் பலர் பங்கேற்றனர். தற்காலிக இடம் ஆனைமலை தாலுகாவில் புதிதாக கோர்ட் கட்ட நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து கட்டடம் கட்ட வேண்டும். அதுவரை, கோர்ட் தற்காலிகமாக செயல்பட இடம் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி ஆனைமலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, தற்காலிக இடத்தில் கோர்ட் செயல்பட உள்ளது. அரசு உத்தரவு கிடைத்ததும் கோர்ட் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோர்ட்டுக்கு உட்பட்ட பகுதிகள்!
வக்கீல்கள்கூறியதாவது: கோர்ட் அமைந்தால், ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு, வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆனைமலை தாலுகாவில் சமத்துாரில் துவங்கி, ரெட்டியாரூர், அர்த்தநாரிபாளையம் வரையும், ஆழியாறு, நவமலை, கோவிந்தாபுரம், செமணாம்பதி, மீனாட்சிபுரம், நஞ்சேகவுண்டன்புதுார் வரை உள்ள வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படும். ஆனைமலையில் கோர்ட் துவங்கப்பட்டால், பொள்ளாச்சி உரிமையியல் நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள, ஆனைமலை தாலுகா பகுதிக்கு உட்பட்ட வழக்குகள், புதிய கோர்ட்டுக்கு மாற வாய்ப்புள்ளது. இவ்வாறு, கூறினர்.