ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் துவக்க விழா
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் தமிழக வேளாண் துறை சார்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க துவக்க விழா நடந்தது.தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க துவக்க விழா நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வேளாண் துணை அலுவலர் விஜயகோபால் வரவேற்றார். மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் கார்த்திக், முன்னிலை வகித்து, தமிழக அரசு கடந்த ஆண்டுகளில் விவசாயிகளுக்காக செயல்படுத்திய பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.வேளாண் அலுவலர் கோமதி, பயறு வகை விதைத்தொகுப்பு, காய்கறி விதைத்தொகுப்பு மற்றும் பழமர செடிகள் இலவசமாக வழங்குவதாகவும், முறையாக பயன்படுத்தி கொள்ளுமாறு விவசாயிகளை கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு பயறு பெருக்கு திட்டம் வாயிலாக மரத்துவரை, காராமணி, அவரை, நாட்டு ரக விதைகள் கொண்ட தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், தோட்டக்கலை துறை சார்பில் காய்கறி விதைகள் பழ செடிகள், கீரை விதைகள் கொண்ட தொகுப்பு, 65 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டன.