புதரில் பதுங்கும் சிறுத்தை; கக்கன் காலனி மக்கள் அச்சம்
வால்பாறை; வால்பாறை, கக்கன் காலனியில் மீண்டும் சிறுத்தை நடமாடுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் சமீப காலமாக சிறுத்தை அதிகளவில் நடமாடுகின்றன. கடந்த, பத்து மாதத்தில் இரண்டு குழந்தைகளை சிறுத்தை கடித்து கொன்றது. இதனால், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் விளையாட கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், எஸ்டேட் பகுதியில் மட்டுமே நடமாடும் சிறுத்தைகள், சமீப காலமாக வால்பாறை நகரிலும் இரவு நேரத்தில் ஜோடியாக உலா வருகின்றன. இதனால் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் பீதியடைந்துள்ளனர்.இதனிடையே, வால்பாறை நகர் கக்கன் காலனியில் உள்ள உத்திரகாளியம்மன் கோவில் வளாகத்துக்கு, சிறுத்தை அடிக்கடி வந்து செல்கிறது. பகல் நேரத்தில் புதரில் பதுங்கும் சிறுத்தை, மாலை நேரத்தில் கோவில் வளாகம், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அச்சுறுத்தி வருகிறது.பொதுமக்கள் கூறியதாவது: கக்கன் காலனியை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதியில் புதர் அதிகம் உள்ளதால், சிறுத்தை பதுங்கி மக்களை அச்சுறுத்துகிறது. மாலை நேரத்தில் கோவிலுக்கு கூட செல்ல அச்சமாக உள்ளது.இரவு நேரத்தில் தெருவிளக்கும் எரிவதில்லை. பல முறை நகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே எரியாத தெருவிளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். சிறுத்தையிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், புதரை அகற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.